
விலைவாசி: ப.சிதம்பரம்-கமல்நாத் மோதல்
டெல்லி: விலைவாசி உயர்வு தொடர்பாகவும் வரி விதிப்புகள் தொடர்பாகவும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடு்த்து விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடக்கவிருந்த மத்திய அமைச்சர்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.
விலைவாசியைக் கட்டுப்படுவது தொடர்பாக என்ன வகையான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தெடர்பாக இரு அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.
ஒரு பக்கம் பண வீக்கம் கட்டுக்காமல் அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டுள்ளது.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அரிசி, சிமெண்ட் ஆகியவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார் சிதம்பரம். அதே போல சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரிகளைக் குறைத்தார்.
ஆனால், வரிக் குறைப்பை மேலும் பல உணவுப் பொருட்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என கமல்நாத் விரும்புகிறார். வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்கள் இறக்குமதியை அதிகரித்தால் தான் அவற்றின் விலையை குறைக்க முடியும் என கமல்நாத் கருதுகிறார்.
ஆனால், ஏற்கனவே குறைக்கப்பட்ட வரிகளால் மத்திய அரசுக்கு இதுவரை ரூ. 10,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுவிட்டதால், இனியும் வேறு பொருட்கள் இறக்குமதிக்கு வரியைக் குறைக்க முடியாது என்பது சிதம்பரத்தின் வாதம்.
உணவுப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துவிட்டதால் வரிகளைக் குறைத்தால் மட்டும் இந்தியாவி்ல் விலைவாசி குறைந்துவிடாது என்கிறார் சிதம்பரம். இது தொடர்பாக இரு அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமாகியுள்ளன.
உலக அளவி்ல் சமையல் எண்ணெய்க்கு உற்பத்திக்கு வர வேண்டிய தானியங்கள் பயோ-டீசல் உற்பத்திக்காக திருப்பிவிடப்பட்டுவிட்டது தான் தானியங்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்று கருதப்படுகிறது.
மேலும் உணவு தானிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் கடந்த இரு ஆண்டுகளால் ஏற்பட்ட வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதனாலும் சர்வதேச அளவில் கோதுமை உள்ளிட்ட தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காரணங்கள் இப்படியிருக்கும்போது வரியைக் குறைத்தால் மட்டும் எப்படி தானியங்கள் வரத்து அதிகரிக்கும் என்பது சிதம்பரம் கேட்கும் கேள்வி.
மேலும் இரும்பு மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும், ஏற்றுமதியையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கமல் நாத் கூறுகிறார். ஆனால், இதனால் அரசுக்கு வருவாய் பாதிக்கப்படும் என்பதால் இதை சிதம்பரம் ஏற்க மறுத்து வருகிறார்.
இதற்கிடையே சர்வதேச அளவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை வைத்து கொள்ளை லாபம் அடிக்க முயலும் பெரும் வர்த்தகர்கள் அதை பதுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் பொருட்களின் விலை உலக அளவில் இந்தியாவில் மட்டும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்தப் பதுக்கலில் பாஜக ஆதரவு பெற்ற வர்த்தகர்களே பெருமளவில் ஈடுபட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் லாலு புகார் கூறியது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கமல்நாத் கோரிக்கை விடுத்துள்ளார்.