சிறுமி எரித்துக் கொலை-வாலிபருக்கு தூக்கு
சென்னை: சிறுமியை எரித்துக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் லோகநாத தெருவைச் சேர்ந்தவர் ஷீபா (எ) எலிசபெத் (30). இவரது மகள் ரெபேக்கா (9) மகன் சாமுவேல் (6). கணவரை இழந்த ஷீபா தனது வீட்டிலேயே ஆதரவற்றோர் மற்றும் அனாதை இல்லம் நடத்தி வந்தார்.
குன்றத்தூர் மணம்சேரியை சேர்ந்தவர் ஷகிலா (29). கணவனால் கைவிடப்பட்ட இவர் தனது குழந்தையுடன் ஷீபாவின் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி வேலை செய்தார். அப்போது அங்கு கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த செஞ்சியைச் சேர்ந்த கொத்தனார் வெங்கடேசனுக்கும் ஷகிலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
வெங்கடேசனை ஷீபாவுக்கு அறிமுகப்படுத்திய ஷகிலா, ஆதரவற்றோர் இல்லத்திலேயே கார் டிரைவர் வேலையும் வாங்கிக் கொடுத்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையிலான கள்ளத் தொடர்பு ஷீபாவுக்குத் தெரியவந்தது. இருவரையும் ஷீபா கண்டித்தார். அவர்களின் தொடர்பு தொடர்ந்ததால் வேலையை விட்டு நீக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஷகிலா, ஷீபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஷகிலாவின் தந்தையிடம் ஷீபா கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசனும், ஷகிலாவும் ஷீபாவை குடும்பத்தோடு அழித்துவிடுவதாக மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இந் நிலையில் கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ரெபேக்காவிடம் எரியும் மெழுகுவர்த்தியை கொடுத்துள்ளனர் வெங்கடேசனும் ஷகிலாவும்.
பின்னர் ரெபேக்கா மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளனர். ரெபேக்கா உடலில் தீ பற்றி எரிந்தது. உடனிருந்த சாமுவேல் உடலிலும் தீப் பிடித்தது.
காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார் ஷீபா. ஆனால் ரெபேக்கா பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனையும், ஷகிலாவையும் கைது செய்தனர். இருவர் மீதான வழக்கு, பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ஷகிலாவை கடந்த 2008ம் ஆண்டு அவரது கணவர் அருள் கொலை செய்தார்.
இந்நிலையில் சிறுமி கொலை வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி அசோகன் நேற்று தீர்ப்பளித்தார். வெங்கடேசனுக்கு தூக்கு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைகேட்ட வெங்கடேசன் மயங்கி விழுந்தார். போலீசார் அவரை சிறைக்கு கொண்டு சென்றனர்.