விலைவாசி: அதிமுக-கம்யூ. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையிலிருந்து இன்று அதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் பேசுகையில், தேசிய அளவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் இன்று தொடங்கும் போராட்டம் குறித்து விளக்கினார்.
பின்னர் மத்திய அரசைக் கண்டித்து அவர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினார். அவருடன் சிபிஐ உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்தசாமியும், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் எழுந்து, முதுகில் குத்துவதே இடதுசாரிக் கட்சிகளின் வழக்கமாகப் போய் விட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இடதுசாரிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த சமயத்தில், அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, விலைவாசி உயர்வால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
மத்திய அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த வெளிநடப்பு குறித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
உறுப்பினர்களின் நடவடிக்கை குறித்து நான் எதிர்ப்பு தெரிவிக்க விரும்பவில்லை. ஜனநாயக முறையில் நமது எதிர்ப்பைக் காட்டும் ஒரு வழிதான் வெளிநடப்பு. ஆனால் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வது என்பது முறையல்ல என்றார்.