சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை மேலும் ஒரு மாதம் தள்ளிவைப்பு
இஸ்லாமாபாத்: இந்தியர் சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடுவதை பாகிஸ்தான் அரசு மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.
கடந்த 18 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. அதிபர் முஷாரப்பும் சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை நிராகரித்து விட்டார்.
இதுதொடர்பாக இந்திய அரசு விடுத்த கோரிக்கையையும் பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி சரப்ஜித் சிங் தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய அரசும், பாகிஸ்தான் மனித உரிமை அமைப்பும் சரப்ஜித் சிங் விடுதலைக்காக கடுமையாக முயற்சித்தன. இதையடுத்து சரப்ஜித் சிங்கை தூக்கிலிடுவதை ஒரு மாதத்திற்கு (மே 1 வரை) தள்ளிவைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
வருகிற 30ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவதால் மறுபடியும் சரப்ஜித் சிங் விவகாரம் பரபரப்படைந்துள்ளது.
சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அவரது நிலையை பாகிஸ்தான் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த நிலையில் சரப்ஜித் சிங்கை தூக்கிலிடுவதை மேலும் ஒரு மாதத்திற்கு பாகிஸ்தான் அரசு தள்ளி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரப்ஜித் சிங் தூக்குக் கயிற்றிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார்.