குமாரசாமி மீண்டும் ராமநகரத்தில் போட்டி!
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும் குமாரசாமி மீண்டும் பெங்களூர் அருகே உள்ள ராமநகரம் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
கர்நாடக சட்டசபைக்கான தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தனது இரு மகன்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார் கெளடா.
மாஜி முதல்வரான குமாரசாமி ஏற்கனவே போட்டியிட்டு வென்ற ராமநகரத்தில் இருந்து போட்டியிடுகிறார். கெளடா சார்ந்துள்ள ஒக்கலிகா சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி இது.
மேலும் முதல்வரான பின் ராமநகரத்தை தனி மாவட்டமாக்கி அங்கு ஏராளமான வளர்ச்சிப் பணிகளையும் குமாரசாமி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ராமநகரம்.
அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவும் ஒக்கலிகா சமுதாயத்திர் அதிகம் வசிக்கும் ஹோலே நர்சிபுராவிலிருந்து போட்டியிடுகிறார்.
மேலும் தனது சமூகத்தைச் சேர்ந்த மாஜி மந்திரி செலுவராயசாமி, குமாரசாமியின் வலதுகரமான ஜமீர் அகமத் கான் உள்பட 64 பேருடன் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளார் கெளடா.
பஸ் போக்குவரத்து நடத்தி வரும் ஜமீர் சாம்ராஜ்பேட்டையிலிருந்து போட்டியிடுகிறார். நில 'சுவாஹா' விவகாரத்தில் சிக்கிய ராமசாமிக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ரெளடிகள் கைது:
இதற்கிடையே சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூர் நகரில் இன்று ஒரே நாளில் மட்டும் 490 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் ஐ.டி., ரியல் எஸ்டேட்டுக்கு இணையாக வளர்ந்து வரும் தொழில் ரெளடித் தொழிலாகும். இங்கு முக்குக்கு மூன்று ரெளடிகள் உண்டு. இவர்களது எண்ணிக்கை மிக வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக நகரின் தென் பகுதிகளில் இந்தக் கும்பல்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை போலீசாரே ஒப்புக் கொண்டுள்ளனர்.
போலீஸைக் கண்டால் எந்த பயமும் இல்லாமல் சுற்றி வரும் சட்ட விரோத கும்பல்கள் இங்கு ஏராளம். இந் நிலையில் தேர்தல் வருவதால் 'சாஸ்திரத்துக்காக' அவர்களை போலீசார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
பேருக்கு சிறையில் அடைக்கப்படும் இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் வெளியே வந்து மீண்டும் 'தொழில்' செய்வார்கள்.