For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூக நீதி போராட்டம் இன்னும் ஓயவில்லை- ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. சமூக நீதிக்கான போராட்டம் தொடரும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ராமதாசை வாழ்த்தினர்.

நல்லகண்ணு:

நல்லக்கண்ணு பேசுகையில்,

மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் பிறப்பால் வேற்றுமை இருக்கிறது. இந்தியாவில் 11 சதவீதத்தினர் தான் மேல் நிலைக் கல்விக்கு செல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த 11 சதவீதத்தினர் தவிர மற்றவர்களால் ஏன் உயர் கல்விக்கு செல்ல முடியவில்லை. என்ன காரணம் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தலித்களால் கல்வியை ஏன் தொடர முடியவில்லை என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்கு தனிப் பயிற்சி பெற முடியாமல், குறைவான மாணவர்களே உயர் கல்விக்கு சென்றனர்.

நுழைவு தேர்வை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்ட போது நிறைய தலித் மாணவர்கள் உயர் கல்விக்கு சென்றுள்ளனர். இடஒதுக்கீடு என்பது எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும், அதற்காக போராட வேண்டியது மிக அவசியம் என்றார்.

திருமாவளவன்:

திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிலும் உச்சநீதிமன்றம் தலையிடலாம். அப்போது அந்த இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படலாம். அப்போது தமிழக அரசு என்ன செய்யும். எதையும் முதலிலே யோசிக்க வேண்டும். அதனால் உச்சநீதிமன்றத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை அளவுகோளாக (க்ரீமி லேயர்) கொண்டு எந்த பெயரில் இட ஒதுக்கீடு வந்தாலும் அதை அனுமதிக்க கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் இதுவரை 6 சதவீதமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. நாளை இதையே காரணம் காட்டிக் கூட அதை நிறுத்தி விடும் நிலையும் வரும். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
சமூகநீதிக்கான போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து நடத்த வேண்டும். இதற்காக அவர் நடத்தும் போராட்டங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் எப்போதும் ஆதரவு கொடுக்கும் என்றார்.

டாக்டர் ராமதாஸ்:

ராமதாஸ் பேசுகையில்,

திருமாவளவன் பேசும்போது உலக மயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்று உருவாகியுள்ள சூழ்நிலையில் பொதுத்துறையிலும், அரசு துறையிலும் 15 சதவீதம் தான் இடஒதுக்கீடு உள்ளது மீதி 85 சதவீதம் தனியார் துறையிடம் உள்ளது. அதனால் தனியார்துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் வேண்டும் என்று கூறினார்.

அதற்காகவும் நாம் போராட வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதற்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து ஒரு குரல் கூட இல்லை. இப்போது அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. 2011க்குள் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும்.

நம்முடைய மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறும் தகுதியை பெறுவதற்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தரமான உறைவிட பள்ளிகளை தொடங்க வேண்டும். அங்கு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

ஒரு மாணவனுக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம் செலவழிக்கிறது. படித்து முடித்ததும் அந்த மாணவன் வெளிநாட்டுக்கு சம்பாதிக்க போய் விடுகிறான், மாதம் ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக.

இதையே ஒரு பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி.க்கு வழங்கினால் அந்த மாணவர்கள் இங்கேயே இந்திய திருநாட்டிற்காக உழைத்துக்கொண்டு இருப்பார்கள்.

இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. சமூகநீதிக்கான போராட்டம் தொடரும். இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் இணைந்த போராடுவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X