வேலுச்சாமியை வெளியேற்ற உத்தரவு-அதிமுக வெளிநடப்பு
சென்னை: அதிமுக எம்எல்ஏ வேலுச்சாமியை பெண் காவலர்களை வைத்து வெளியேற்ற உத்தரவிட்டதை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் எழுந்து, தான் கொடுத்த கவன ஈர்ப்பு பிரச்னை குறித்து பேச அனுமதிக்க கோரினார். அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் சேகர்பாபு, வேலுச்சாமி ஆகியோரும் குரல் கொடுத்தனர்.
அவர்களை அமரும்படி சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால் பேச அனுமதிக்கும்படி தொடர்ந்து கூச்சலிட்டனர். அவர்களை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையில் இடம் மாறி உட்கார்ந்த வேலுச்சாமி, சபாநாயகருக்கு எதிராக குரல் கொடுத்தார். அவை மரபுகளை மீறும் வகையில் நடந்த வேலுச்சாமியை வெளியேற்ற சபாநாயகர் காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே உள்ளே காவலர்கள அவரை வெளியேற்ற முயன்றனர்.
ஆனால் வேலுச்சாமியை வெளியேற்ற முடியாதபடி அதிமுகவினர் வழிமறித்து நின்றனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் குறிப்பிட்ட நபரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். சபை காவலர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது குற்றமாகும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டபடி காவலர்களை தடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி அவை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் இருதரப்புக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு உறுப்பினரை வெளியேற்ற 100 காவலர் அனுப்புவது, அதிலும் பெண் காவலர்களை அனுப்புவது நியாயமில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு சென்றார்.
அவருடன் மற்ற அதிமுக எம்எல்ஏகளும் வெளிநடப்பு செய்தனர்.