மது அருந்தும் காட்சிகள்-தவிர்க்க நடிகர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்
டெல்லி: சிகரெட்டைத் தொடர்ந்து மது அருந்தும் காட்சிகளிலும் நடிப்பதை தவிர்க்க நடிகர்கள் முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி.
இந்தியாவில் புகை பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே மத்திய சுகாதாரத் துறை தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
மத்திய அமைச்சர் அன்புமணி வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் சிகரெட்டைத் தொடர்ந்து மது அருந்தும் காட்சிகளையும் நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சினிமாக்களில் மது அருந்தும் காட்சிகள் அதிகரித்து வருகிறது. வில்லன்கள்தான் மது அருந்துவது போல நடிப்பார்கள். இப்போது பெரும்பாலான ஹீரோக்களும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்கின்றனர்.
இதைப் பார்த்து ரசிகர்களும் மதுவுக்கு அடிமையாகின்றனர். எனவே நடிகர்கள் மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது. மதுவிலக்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப் பட்டுள்ளது.
குஜராத், மணிப்பூர், காஷ்மீர், மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள் மதுவிலக்கை கடைபிடிக்கவில்லை. தற்போது மதுப்பழக்கம் இந்தியாவுக்கு மிகப்பெரிய மிரட்டலாக இருக்கிறது. 19 முதல் 28 வயது வரையிலான இளைஞர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் மதுக்கடைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அப்போது ரூ.4000 கோடியாக இருந்த மது வருமானம் இப்போது ரூ.8000 கோடியாக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் மதுக் கடைகளை திறந்து மக்களை துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டு அரிசி, இலவச டிவி போன்றவற்றை வழங்கி பயன் இல்லை. மது ஒழிப்பில் எல்லா கட்சிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அன்புமணி.