
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்-லட்டுக்கு தட்டுப்பாடு

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு வசதியாக விரைவு தரிசனத்துக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவதால் திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2 லட்டு வீதம் வழங்க வேண்டுமானால் 2 லட்சம் லட்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் கோயிலில் உள்ள சமையல் கூடத்தில் 1.60 லட்சம் லட்டுக்கள் மட்டுமே தயாரிக்க முடிகிறது. இதனால் லட்டுக்கு கிடைக்காமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.
தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், கோயில் சமையல் கூடம் சிறிதாக இருந்தாலும் கூடுதலாக 20,000 லட்டுகள் தயாரிக்கிறோம். ஆனாலும் லட்டுகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே சாதாரண பக்தர்களுக்கு லட்டு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வி.ஐ.பிகளுக்கு லட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.