ராஜினாமாவா?-எதிர்க்கட்சிகள் கனவு பலிக்காது: பாலு
சென்னை: எனது குடும்பத்தினரின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை செய்யப்படவில்லை என்று பிரதமரும், பெட்ரோலியத்துறை அமைச்சரும் தெளிவாக கூறி விட்டனர். இதற்கு மேலும் என்னை ராஜினாமா செய்ய வைத்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நிச்சயம் நடக்காது என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது குடும்பத்தினர் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளனர். நானும் எனது தரப்பு விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளித்து விட்டேன்.
இதற்கு மேல் உங்களுக்கு (எதிர்க்கட்சிகள்) என்ன வேண்டும். இனியும் தொடர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிள் கோரினால், அது நிச்சயம் நடக்காது.
ஒன்றுமில்லாத பிரச்சினையை வைத்து என்னை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என முயலுகிறார்கள். இது நிச்சயம் வெற்றி பெறாது என்றார் டி.ஆர்.பாலு.