For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்ககாசு மோசடி-7 பேர் கைது: நடிகைக்கும் தொடர்பு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தங்ககாசு தருவதாக கூறி மோசடி செய்த போலி நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33). இவர் வடசென்னை இணை கமிஷனர் ரவியிடம் புகார் கொடுத்தார். அதில், குறைந்த முதலீட்டில் தங்ககாசு விற்பனையில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை இண்டர்நெட்டில் பார்த்தேன்.

சேத்துப்பட்டில் உள்ள அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். தங்ககாசு விற்பனை திட்டத்தில் ரூ.33,000 கட்டினால் 6 கிராம் தங்கம் தரப்படும். 2 பேரை திட்டத்தில் சேர்த்துவிட்டால் அதில் ஒருவரின் முதலீட்டு பணம், சேர்த்து விடும் நபருக்கு கொடுக்கப்படும்.

இப்படி சங்கிலி தொடர் போல் பணம் சேர்த்து கொண்டே போகும் என்று கூறினர். இதன் மூலம் ஏராளமான தங்க காசும், லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

அதை நம்பி வட்டிக்கு பணம் வாங்கி ரூ.70,000 வரை கட்டினேன். ஆனால் தங்ககாசும் தரவில்லை, பணமும் வரவில்லை. இதுகுறித்து நிறுவனத்திடம் கேட்டபோது, பணம் தரமுடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

இவர்களின் மோசடியில் சிக்கி ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பலர் இத்திட்டத்தில் ஏமாந்துள்ளனர். மோசடி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தத் திட்டத்தில் நடிகை ஒருவரும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இதனால் இதுகுறித்து விரிவாக விசாரிக்க இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார்.

இதையடுத்து செம்பியம் போலீஸார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மோசடி நடந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தங்ககாசு நிறுவன பொதுமேலாளரும், பெண் தொழிலதிபருமான புஷ்பம், மேலாளர் அரிபிரபாகர், சுரேஷ், சந்திர சேகர், அகஸ்டின், விஜயா உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்படுவது விஜய பாஸ்கரன் என்றும் பாங்காக்கில் இருந்து இன்டர்நெட் மூலம் போலி விளம்பரங்களை கொடுத்து கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அடிபடும் நடிகைடமும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையே இந்தத் திட்டத்தில் பணம் முதலீடு செய்துள்ள சுமார் 500 பேர் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிறுவனம் நல்ல நிறுவனம் என்றும் மோசடி ஏதும் செய்யவில்லை என்றும், கைதானவர்களை விடுதலை செய் என்றும் கோஷமிட்டனர்.

அவர்களிடம் உதவி கமிஷனர் அசோக், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கலைந்து செல்லுங்கள் என்றார்.

ஆனால், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவல்லிக்கேணி துணைக் கமிஷனர் ராமசுப்பிரமணி போலீஸ் படையுடன் விரைந்து வந்தார்.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களிடம் பேச்சு நடத்திய அவர், கமிஷனரை சந்திக்க 3 பேர் மட்டும் செல்லலாம் என்றார்.

இதையடுத்து வைத்தி, நபில், ஜெரி ஜார்ஜ் மூவரும் உள்ளே சென்று கமிஷனரை சந்தித்துப் பேசினார்கள். அப்போது வெளியில் நின்ற மற்றவர்கள் கோஷம் எழுப்பியப்படி இருந்தனர்.

அவர்களை உடனே கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அங்கேயே நின்று போலீஸை கண்டித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்களில் 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அடிவாங்கிக் கொண்டு அவர்கள் சிதறி ஓடினர்.

இந்த சம்பவம் காரணமாக எழும்பூர் கமிஷனர் அலுவலக பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X