• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீண்டாமைச் சுவர் அதிரடி இடிப்பு - உத்தபுரத்தில் பதற்றம்

By Staff
|

Uthapuram wall
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது பகுதிக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை வர விடாமல் தடுத்து விட்டனர்.

இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பல கிலோமீட்டர் சுற்றி முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த சுற்றுச்சுவரை உடனடியாக தகர்த்தெறிய வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு வகையில் போராட்டங்களையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதனால் உத்தபுரம் மறுபடியும் அக்னிக் குண்டமாக மாறியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வருவாய்த்துறையினர் சிலநாட்களுக்கு முன்பு உத்தபுரம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையின்போது இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்ததால் சமாதானம் ஏற்படவில்லை.

இந் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் உத்தபுரம் வந்தார். தீண்டாமைச் சுவரைப் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

சுமூகமான முறையில் இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் பின்னர் ஜவஹர் தெரிவித்தார்.

15 அடி சுவர் இடிப்பு:

இந் நிலையில் இன்று காலை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர்.

கிழக்குத் தெருவில் உள்ள 15 அடி சுவரை அதிகாரிகள் இடித்தனர். இதையடுத்து அங்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் உத்தபுரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

அசம்பாவிதம் ஏதும் மூண்டு விடாமல் தடுக்க 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் காரத் வருகை:

இந்தச் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நாளை உத்தபுரம் வருகிறார்.

பிரகாஷ் காரத் வருகைக்கு சுவர் எழுப்பிய சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பெரும் திரளாக வந்த அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தபுரத்தில் இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அதிகாரிகள் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இன்னொரு நந்திகிராமமாக இது மாறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம்தான் உள்ளது.

சுவரை இடிக்க அரசு முயலக் கூடாது. அப்படி நடந்தால் மறுபடியும் அங்கு போராட்டம் வெடிக்கும், எங்களது ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் திரும்ப ஒப்படைத்துப் போராடுவோம்.

பிரகாஷ் காரத் வருகையால் பதட்டம்தான் அதிகரிக்கும். எனவே அவர் வரக் கூடாது. மீறி வந்தால் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

40 பேர் மீது வழக்கு:

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு பிரிவையும் சேர்ந்த தலா 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

உத்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நடக்கும் நிகழ்வுகளால், தீண்டாமைக் கொடுமையின் தீவிரத்தை பறை சாற்றும் வகையில் உறுதியாக நிற்கும் செங்கல் சுவருடன், செந்நீர் கொதிக்கும் உணர்வுகளுடன் உத்தபுரம் பதட்டத்துடன் காணப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X