For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் முதல் கட்ட தேர்தல்-அமைதியான நடந்தது

By Staff
Google Oneindia Tamil News

Karnataka Map
பெங்களூர்: கர்நாடகத்தில் இன்று முதல் கட்டமாக 89 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது.

காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலுக்காக 18,652 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 1.75 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

வாக்குப்பதிவு 10 மணி வரை மிக மந்தமாக இருந்தது. பின்னர் மக்கள் வரத்து அதிகரித்தது. வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓட்டளித்ததால் வாக்குப் பதிவில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத் தேசியத் தலைவருமான தேவே கெளடா, அவரது மகன்கள் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ரேவண்ணா, பாஜக தலைவர் வெங்கயா நாயுடு, முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா ஆகியோர் வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வாக்களி்ததுவிட்டு திரும்பிய குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையி்ல், எங்களுக்கு பாஜகவோ, காங்கிரசோ சமமான போட்டியாளர்கள் இல்லை. இந்த முறை மஜதவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். நான் கிங்மேக்கராக இருக்க விரும்புவதில்லை. நான் தான் கிங் என்றார்.

பட்டியல் குழப்பம்:

சதாசிவம் நகர் தொகுதியில் நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வத்தம்மாள், மகன் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரின் மற்ற இருமகன்களான ஷிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார் ஆகியோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதேபோல எல்லா தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்க் குழப்பம் இருந்ததால் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பினர். தேர்தல் கமிஷன் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்ததால் பல இடங்களில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சில கட்சியினர் மறியல் நடத்த முயன்றபோது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது.

பிரச்னைக்குரிய இடங்களில் அதிரடிப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவின்போது குறிப்பிடும்படியாக எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முதல் கட்டத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளும் அடக்கம்.

காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள இந்தத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனது ஓட்டு வங்கியை தக்க வைக்க பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பொம்மனஹள்ளி, சிவாஜி நகர், பிடிஎம் லே அவுட் ஆகிய பெங்களூர் தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வரும் 16ம் தேதி 2-வது கட்ட தேர்தலும், 22ம் தேதி 3-வது கட்ட தேர்தலும் நடக்கிறது. 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X