For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலெக்டர்கள் மணல் ஏலம் விட அதிகாரம்: அரசு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆற்று மணலை பகிரங்க ஏலம் விட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, நிதித்துறை, உள்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள், தொழில்துறை சிறப்புச் செயலாளர்ள், கனிம வளங்கள் துறை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்:

- முதல்வர் கருணாநிதி தலைமையில், 25.5.2008 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

- 19.6.2008, 20.6.2009 ஆகிய இரு நாட்களுக்கு முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும். இதில் சட்டம் ஒழுங்கு, அரசு நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.

- ஆற்று மணல் குவாரிகளிலிருந்து மணலை எடுத்து விற்பனை செய்வதை கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசே எடுத்து செய்து வருகிறது. இந்தப் பணியை பரவலாக்கவும், கூடுதல் கண்காணிப்பை உறுதி செய்யவும், குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், 2003ம் ஆண்டு முன்பு இருந்தபடி ஆற்று மணல் குவாரிகளிலிருந்து மணலை எடுத்து விற்பனை செய்வதை, டெண்டர் மற்றும் பகிரங்க ஏலம் மூலம் நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்றும், இந்த மாற்று ஏற்பாட்டினை ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதென்றும் அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம் பழையபடி தனியார் வசம் மணல் குவாரிகள் செல்கின்றன.

கடந்த அதிமுக ஆட்சியின்போது மணல் குவாரிகள் குறித்து ஆராய 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு கனிம வள சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் ஆற்றங்கரைகளில் மணல் எடுப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகள் தனியார் வசமிருந்து பறிக்கப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் அப்பொறுப்பு மாற்றப்பட்டது.

தற்போது, மாநிலம் முழுவதும் உள்ள 139 மணல் குவாரிகளிலிருந்து மணல் எடுத்து அதை விற்பனை செய்யும் பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

அரசே மணல் குவாரிகளை நடத்துவதால் அரசின் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மணல் குவாரிகளை மீண்டும் டெண்டர் மற்றும் பொது ஏலம் மூலம் நடத்த அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X