மு.க.ஸ்டாலின் மனைவியின் உறவினர் படுகொலை
திருவாரூர்: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் உறவினரும், பிரபல தவில் வித்வானுமான சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
துர்கா ஸ்டாலினின் உறவினர் சங்கர் (42). தவில் வித்வானான இவர், திருவாரூர் குளிக்கரை, மேற்குத் தெருவில் வசித்து வந்தார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. கடந்த மாதம் இப்பகுதியில் நடந்த வேட்டையின்போது முருகேசன் கைது செய்யப்ட்டார்.
இதையடுத்து தான் கைது செய்யப்பட்டதற்கு சங்கர்தான் காரணம், அவர்தான் போலீஸுக்கு உளவு சொல்லியிருப்பார் என சந்தேகப்பட்டார் முருகேசன்.
இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசனும், அவரது தம்பி இளையராஜாவும், சங்கரை கொடூரமாக கட்டையால் அடித்து விட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீஸார் தப்பி ஓடிய முருகேசனையும், இளையராஜாவையும் கைது செய்தனர்.