ராஜஸ்தானில் கலவரம்-13 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் திடீர் கலவரத்தில் இறங்கியுள்ளனர். இந்தக் கலவரத்திற்கு 13 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ராஜஸ்தானில் பதட்டம் எழுந்துள்ளது. மோதலை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு குஜ்ஜார் சமூகத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட் கலவரத்தில் பலர் பலியானார்கள்.
இந்த நிலையில் நேற்று திடீரென குஜ்ஜார் சமூகத்தினர் கலவரத்தில் இறங்கினர். பரத்பூர் மாவட்டத்தில் நேற்று இக்கலவரம் வெடித்தது. அங்குள்ள துமாரியா ரயில் நிலையத்திறகுள் புகுந்த குஜ்ஜார் இனத்தவர், ரயில் மறியலில் முதலில் குதித்தனர். அப்போது சிலர் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் கலவரக்காரர்கள், போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். போலீஸ் ஜீப் ஒன்ரு தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
கல்வீச்சிலும் கலவரக்காரர்கள் ஈடுபட்டனர். இதில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.
கலவரம் மேலும் பரவி விடாமல் தடுக்க பரத்பூருக்கு அருகே உள்ள 4 மாவட்டங்களில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 10 பிரிவு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய திடீர் கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷனை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா நியமித்துள்ளார்.