ஒகேனக்கல்: தமிழக அரசின் நிலை என்ன?-விஜய டி.ராஜேந்தர்
சென்னை: கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி என்ன செய்யப்போகிறார் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் விஜய டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டத்தை கர்நாடக தேர்தலுக்காக தள்ளி வைக்க கூடாது என கூறினேன். ஆனால் காங்கிரஸ் கட்சிக்காக நம் முதல்வர் அந்த திட்டத்தை தள்ளி வைத்தார்.ஆனால் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. அக்கட்சியின் தவறான பொருளாதார கொள்கையால் மத்திய அரசு கவிழ்ந்துவிடும்.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவியில் இருந்து நீக்காவிட்டால் எதிர்காலம் மோசமாகிவிடும்.
இப்போது அங்கு பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இனி முதல்வர் கருணா நிதியின் நிலை என்ன?
இதற்கு முன்பு நடந்த 2006 தேர்தலில் தி.மு.க. தான் ஜெயிக்கும் என்றும், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் ஜெயிக்கும் என்று கூறினேன்.
ஜாதகத்தை கணித்து ஆராய்ச்சி செய்தவன் என்ற முறையில் சொன்னேன். தமிழன் என்பதால் நான் சொன்னது எடுபடவில்லை. இதே கருத்தை ஒரு குருவாயூர் ஜோசியர் சொல்லி இருந்தால் பிரபலம் ஆகி இருக்கும்.
வருகிற எம்.பி. தேர்தலில் விஜயகாந்த் கட்சி தனித்து போட்டியிட்டால் கடலில் மூழ்கிய கப்பல் ஆகிவிடும். 70 சதவீத ஆதரவு இருக்கிறது என்று சொல்லும் விஜயகாந்த் தனித்து போட்டியிட வேண்டியதுதானே? அவரது கட்சி காணாமல் போய் விடும். அவருடன் உள்ளவர்கள் சிதறி ஓடி விடுவார்கள்.
எனது அரசியல் எதிர்காலம் குறித்து இப்போது சொல்ல விரும்பவில்லை. என் கட்சி பணி சிறப்பாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் எங்களை இணைத்து கூட்டணி வைத்துக் கொள்வதே முக்கிய கட்சிகளின் வெற்றி ரகசியமாக இருக்கும்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.