கருணாநிதி பிறந்த நாள்: தீவுத் திடலில் பிரமாண்ட கூட்டம்

முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுகவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளனர்.
ஜூன் 3ம் தேதி சென்னை தீவுத் திடலில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ரகுவன்பிரசாத்சிங், அன்புமணி ராமதாஸ், பிரபுல்படேல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சீத்தாராம் எச்சூரி எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி. ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகிறார்கள்.
முதல்வர் கருணாநிதி ஏற்புரை ஆற்றுகிறார்.
3 அரங்குகளில் 3 நாள் விழா:
இதுதவிர முதல்வர் பிறந்த நாளையொட்டி 3 நாள் நிகழ்ச்சிகளுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. இதில் கவிஞர்கள், கல்வியாளர்கள், நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் 3 அரங்குகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளரும், சென்னை மேயருமான மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழர்களின் ஒப்புயர்வற்ற பாதுகாவலர் தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் 85-வது பிறந்த நாளில் தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் கலை ஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று பாடி, பாராட்டி, போற்றி மகிழ்ந்திடும் மூன்று இனிய விழாக்கள், மூன்று நாட்கள், மூன்று அரங்கங்களில் நடை பெறுகின்றன.
இவ்விழாக்களுக்கு தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் எல்.பல ராமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சுகவனம் எம்.பி., சேலம் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுப.த. சம்பத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
முதல் நிகழ்ச்சியாக 4.6.2008 (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் கவியரங்கம் நடை பெறுகிறது. கவியரங்கத்திற்கு கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகிக்கிறார்.
கவியரங்கில், கவிப்பேரரசு வைரமுத்து, மு.மேத்தா, பொன் செல்வகணபதி, ஆண்டாள் பிரியதர்சினி, கவிஞர் கருணாநிதி ஆகியோர் கவி பாடுகின்றார்கள்.
2-வது நாள் 5.6.08 (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா சாலை காமராசர் அரங்கில் திரைக்கலைஞர்கள் பங்கு பெறும் வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது.
தேனிசைத் தென்றல் தேவா, கலைஞர் வாழ்த்து பாடல் பாடுகிறார். வாழ்த்தரங்கிற்கு இயக்குநர் பாக்யராஜ் தலைமை வகிக்கிறார்.
நடிகை மனோரமா, நடிகர் மணிவண்ணன், நடிகை குஷ்பு, நடிகர்கள் ராஜேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, சின்னிஜெயந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
மூன்றாவது விழாவாக 6.6.08 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தியாகராயநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் கல்வியாளர்களின் பாராட்டங்கம் நடை பெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராசன், க.ப. அறவாணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ, கோவை பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கர்னல் திருவாசகம், தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராமசந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதிமோகன் ஆகியோர் பாராட்டுரை வழங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.