'சேது ராம்'- பெயர் மாற்றம் குறித்து பிரதமருடன் கருணாநிதி பேச்சு
முதல்வர் கருணாநிதி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
தனது 85வது பிறந்த நாளையொட்டி அதிகாலை 4 மணிக்கு தனது வீட்டில் மரக்கன்று நட்டார் கருணாநிதி. (வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து தனது அன்றாட பணிகளை அவர் துவக்கிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது)
முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல அதிகாலை 3 மணியிலிருந்தே சிஐடி காலனியிலுள்ள அவரது வீட்டில் தலைவர்களும் தொண்டர்களும் குவியத் தொடங்கி விட்டனர்.
சிஐடி காலனி இல்லத்தின் முகப்பில் ஒரு மரக்கன்றை நட்டார். அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் மனைவியார் தயாளு அம்மாளுடன் மாலை அணிந்தபடி தம்பதி சமேதராக வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கு முதல்வரின் குடும்பத்தினர், அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகன் மு.க.அழகிரி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அண்ணா சமாதிக்கும், பெரியார் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் தனக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தலைவர்கள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு பல்வேறு வகையான பரிசுகளைக் கொடுத்து வாழ்த்தும், ஆசியும் பெற்று வருகின்றனர்.
இன்று இரவு 9 மணிக்கு தீவுத் திடலில் பிரமாண்ட பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரபுல் படேல் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் எச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பொதுக் கூட்டத்தையொட்டி தீவுத் திடலில் கப்பல் வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் பெரும் உற்சாகம்:
முதல்வரின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். சென்னை மாநகரம் முழுவதும் திமுகவினர் கட்சிக் கொடியேற்றி அன்னதானம், இனிப்பு வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர்.
கட்சி அலுவலகங்கள் அனைத்தும் மின் விளக்காரங்களில் ஜொலிக்கின்றன. அண்ணா அறிவாலயம் முழுவதும் சர விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கட்சிக் கொடிகள் நகர் முழுவதும் பறந்து வருகின்றன. தோரணங்களும் பெருமளவில் வைக்கப்பட்டுள்ளன.
அக்காளிடம் ஆசி பெற்ற கருணாநிதி:
முன்னதாக நேற்று தனது அக்காள் சண்முகசுந்தரத்தம்மாளை அவரது இல்லம் சென்று சந்தித்தார் கருணாநிதி. அவரிடம் தனது பிறந்த நாளையொட்டி வாழ்த்துக்களையும், ஆசியையும் பெற்றுக் கொண்டார்.
இன்று அறிவாலயத்தில் அவர் தொண்டர்களை சந்திக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்த சென்னையில் குவிந்துள்ளனர்.
சேது ராம்- பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை:
85வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சி்ங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இன்று தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். அப்போது சேது சமுத்திரத் திட்டத்தின் பெயரை சேது-ராம் என மாற்றுமாறு பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை வைத்தார்
கவர்னர் பர்னாலா நேரில் வந்து கருணாநிதியை கட்டியணைத்து வாழ்த்தினார்.
ரஜினி உதவியாளர்:
அதே போல ரஜினியின் உதவியாளரும், ரஜினி மன்றத் தலைவருமான சத்ய நாராயணாவும் கருணாநிதியை ரஜினி சார்பில் வாழ்த்தினார். ரஜினி கேரளாவில் குசேலன் சூட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.