உதயநிதி ஸ்டாலின் சுளீர்! சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை மொத்தமா இழக்குதா தமிழகம்?பின்னணி என்ன
சென்னை: தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய தொகுப்பிற்கு தாரை வார்ப்பதைத் தடுக்கக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் முறையான வாதங்கள் முன்வைக்கப்படாததால் இந்தத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள உதயநிதி. உடனடியாக முதலமைச்சர் இதில் தலையிட்டு அரசு மருத்துவர்களின் நலனைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், "சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் "உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு"களுக்கான 152 இடங்களை "அகில இந்திய தொகுப்பிற்கு" மாற்ற வேண்டும் என மாண்புமிகு உச்சநீதிமன்றம் 29.05.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இசூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது.
2025ம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
விஜய்க்கு கோரிக்கை
கடந்த மே 27ம் தேதி தமிழ்நாடு அரசின் "தேர்வு கமிட்டி" இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில் தமிழ்வாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போது தி.மு.க. அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்
இந்தச் சூழலில் தங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு மே 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அந்த மாணவி மேற்கோள் காட்டிடும் N. Karthikeyan Vs State of Tamilnadu என்ற தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது" என்பதையும், "அகில இந்திய இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை", என்பதையும் "மாநில இடங்களை ஒப்படைத்த பிறகு ஒன்றிய அரசு குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைக்கக் கூடாது" என்ற தகவலையும் முறைப்படி எடுத்து வைக்கவில்லை என்று தெரிய வருகிறது.
அது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைப்பதை பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இடங்களை ஒப்படைத்த பின்பு சதவீதத்தை குறைத்து "All India merit list" மூலம் இடங்கள் நிரப்பப்பட்டால், அது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
152 இடங்கள் நிரப்ப கோரிக்கை
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே "அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்" என ஒப்புக்கொண்ட காரணத்தால், "நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்" என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படும்.
அரசுப்பணி மருத்துவர்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இட ஒதுக்கீடு, கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது. அந்த இட ஒதுக்கீட்டு உரிமை தற்போது தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
ஆகவே மாண்புமிகு முதலமைச்சராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications