For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றப்படுகிறார் கிருஷ்ணசாமி-மீண்டும் தலைவர் வாசன்?

By Staff
Google Oneindia Tamil News

GK Vasan
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கிருஷ்ணசாமியை தூக்கி விட்டு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை அப்பதவியில் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு கிருஷ்ணசாமி வந்ததே ஒரு தற்செயலான நிகழ்வுதான். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி, அப்போது தலைவராக இருந்த ஜி.கே.வாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கியது கட்சி மேலிடம். இந்த நிலையில், ராமமூர்த்தி சார்ந்த வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், ஜி.கே.வாசனை தலைவர் பதவியிலிருந்து அகற்றி விட்டு அவரை மத்திய அமைச்சராக்கியது. அதற்குப் பதிலாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனார் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி.

எந்தக் கோஷ்டியையும் சேராத தலைவரான கிருஷ்ணசாமி, அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து கட்சியை நடத்திச் செல்வார் என்ற எண்ணமும் கட்சிமேலிடத்திடம் இருந்தது.

ஆனால் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏவை மையமாக வைத்து ஒரு கோஷ்டி தமிழக காங்கிரஸில் உருவானது. இந்தக் கோஷ்டிக்கும், ஜி.கே.வாசன் கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சத்தியமூர்த்தி பவனில் சில மாதங்களுக்கு முன்பு ரத்தக்களறியாக மாறியது.

விஷ்ணுபிரசாத் கோஷ்டியினர், வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளும் கிருஷ்ணசாமியை தூக்க பலமுனை முயற்சிகளில் இறங்கின. இருப்பினும் திமுக, பாமகவின் ஆதரவோடு (டாக்டர் ராமதாஸின் சம்பந்திதான் கிருஷ்ணசாமி) இந்த முயற்சிகளை முறியடித்து தலைவர் பதவியில் நீடித்து வருகிறார் கிருஷ்ணசாமி.

ஆனால் சமீபகாலமாக கிருஷ்ணசாமியின் செயல்பாடுகளில் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு கோவை மாவட்ட காங்கிரஸில் ஏற்பட்ட பெரும் கோஷ்டி மோதலே காரணம் எனக் கூறப்படுகிறது.

கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் சமீபத்தில் அதிரடியாக நீக்கப்பட்டனர். தூக்கப்பட்ட அனைவருமே வாசன் ஆதரவாளர்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் தூண்டுதலின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக வாசன் தரப்பு அதிருப்தியுடன் உள்ளது.

பிரபு, கிருஷ்ணசாமிக்கு முழு ஆதரவாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரான அருண்குமார் இருப்பதாகவும், வாசன்தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் காரணத்தால்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடுதல் மேலிடப் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் வயலார் ரவியை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதன் மூலம் அருண்குமாரின் வானளாவிய அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. இதை தங்களது அணிக்குக் கிடைத்துள்ள பெரிய வெற்றியாக வாசன் தரப்பு கருதுகிறது.

இந்தச் சூழ் நிலையில், தலைவர் பதவியிலிருந்து கிருஷ்ணசாமியை தூக்க மேலிடம் நாள் குறித்து விட்டதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசனை மீண்டும் தலைவர் பதவியில் அமர்த்தவும் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளார் கிருஷ்ணசாமி. டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் சோனியா காந்தியை சந்திக்க முயன்று வருகிறார். ஆனால் இதுவரை அவருக்கு நேரம் கிடைக்கவில்லையாம். அதற்குக் காரணம் அவரது பதவிக்கு டைம் குறிக்கப்பட்டு விட்டதுதான் என்கிறார்கள்.

அதேசமயம் வாசன் தரப்பு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை சோனியா சந்தித்துள்ளாராம். அவர்களிடம் தமிழக காங்கிரஸ் நிலவரம் குறித்து சோனியா கேட்டறிந்துள்ளாராம்.

ஜி.கே.வாசன் முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நெருக்கத்தில் உள்ளவர். கட்சி மட்டத்திலும் அவருக்கு பெரும் ஆதரவு உள்ளது. தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களிடையேயும் வாசனுக்கு செல்வாக்கு உள்ளது. எனவே பெரும்பான்மை ஆதரவுடன் உள்ள வாசனை மீண்டும் தலைவராக்கி தமிழக காங்கிரஸை உயிர்ப்பிக்க மேலிடம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் வாசன் தலைவரானால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, பிரபு உள்ளிட்ட கோஷ்டியினர் சும்மா இருப்பார்களா என்று தெரியவில்லை.

'காங்கிரஸ் நாடகம்' - தொடரும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X