For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கால அவகாசம் தந்த இடதுசாரிகள்-தப்பியது அரசு!

By Staff
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: மிக பரபரப்பான சூழ்நிலையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று மாலை நடந்தது.

அதில் இரு தரப்புமே தங்களது பிடிவாத நிலையில் இருந்தாலும் ஆட்சி கவிழ்ப்பு அளவுக்குப் போகவில்லை. விவகாரம் குறித்து பேச கால அவகாசம் கோரியது காங்கிரஸ். அதை இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால் மத்திய அரசு கவிழும் ஆபத்து தற்காலிகமாக நீங்கியுள்ளது.

அதே நேரத்தில், மீண்டும் பேசலாம், ஆனால் அதற்குள் அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையும் இடதுசாரிகள் விடுத்துள்ளனர்.

அணு சக்தி ஒப்பந்த விவகாரம் பெரும் இழுபறியாகியுள்ளது. மத்திய அரசுக்கு உலை வைக்கும் வகையில் இந்த விவகாரம் தற்போது போய் விட்டது.

ஒப்பந்தத்தை கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக உள்ளார். ஆனால் ஒப்பந்தத்தை அப்படியே கைவிட வேண்டும் என இடதுசாரிகள் பிடிவாதமாக உள்ளனர். இவர்களுக்கு இடையே சிக்கித் தவிப்பது இப்போது காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள்தான்.

சமரசத்தை நிராகரித்த இடதுசாரிகள்:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளும் இடைத்தேர்தலை விரும்பவில்லை. குறிப்பாக திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், தேசிய வாத காங்கிரஸ் கட்சி ஆகியவை தேர்தலை விரும்பவில்லை.

இதையடுத்து இக்கட்சிகள் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தக் கட்சிகள் பரிந்துரைத்த சமரசத் திட்டத்தை நேற்று இடதுசாரிகள் நிராகரித்து விட்டனர்.

கூட்டணிக் கட்சிகளின் பரிந்துரை என்னவென்றால், சர்வதேச அணு சக்தி முகமையிடம் மட்டும் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். மற்றபடி அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பிற பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதாகும். ஆனால் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகள் சொல்வதை ஏற்க மாட்டோம் என இடதுசாரிகள் தீர்மானமாக தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து சோனியா காந்தியே இதில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் அவர் பக்கம் பந்தை திருப்பி விட்டுள்ளன.

மன்மோகனுக்கு சோனியா ஆதரவு:

ஆனால் சோனியா காந்தியோ, பிரதமர் மன்மோகன் சிங்கின்கருத்து முழு ஆதரவாக உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறுகையில், இந்த விவகாரத்தில் பிரதமரின் கருத்தே சோனியாவின் கருத்துமாகும். பிரதமருக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார் சோனியா காந்தி. இதுதொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்றார்.

இப்படி அனைத்து வகையிலும் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று ஒருங்கிணைப்புக்கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மாலை 5 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இல்லத்தில் இக்கூட்டம் தொடங்கியது. இதில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், இடது சாரிதலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மேலும் விவாதிக்க வசதியாக இடதுசாரிகளிடம் கால அவகாசம் கேட்டது மத்திய அரசு. அதை இடதுசாரிகள் ஏற்றதால் இன்றைக்கு அரசியல் பூகம்பம் ஏதும் நடக்கவில்லை.

பிரதமருடன் பிரணாப் ஆலோசனை:

முன்னதாக இன்று காலை முதல் டெல்லியில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவியது. அவரை இவர் மீட் பண்ணுவது இவரை அவர் மீட் பண்ணுவது என அரசியல் வட்டாரம் பரபரத்தது.

முதலில் பிரணாப் முகர்ஜியும், பிரகாஷ் காரத்தும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் உடன் இருந்தார்.

சோனியா-பிரதமருடன் ஆலோசனை:

அப்போது, தங்களது நிலையில் எந்தமாற்றமும் இல்லை என்று காரத், பிரணாபிடம் தெளிவாகவே சொல்லிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்க ஓடினார் பிரணாப் முகர்ஜி.

சோனியாவுடனான இந்தச் சந்திப்பின்போது அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேலும் அப்போது உடனிருந்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் பிரணாப் சந்தித்தார்.

காரத்-முலாயமுடன் ஆலோசனை:

இந்த நிலையில், ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பிரகாஷ் காரத்தை சந்தித்துப் பேசினார்.

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றால், காங்கிரஸ் கூட்டணி, முலாயம் சிங் யாதவின் ஆதரவை மலை போல நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் 226 எம்.பிக்கள் உள்ளனர். இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சியின்ஆதரவை சேர்த்தால் பெரும்பான்மைக்குத் தேவையான 272-ஐ விட கூடுதலாக உள்ளது.

ஆனால் தற்போது பகுஜன் சமாஜ்ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது. ஒரு வேளை இடதுசாரிகளும் ஆதரவை திரும்பப் பெற்றால், முலாயம் சிங்கால் மட்டுமே மத்திய அரசு கவிழாமல் காக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்றைய சந்திப்பின்போது தாங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவை வாபஸ் பெற்றால், நீங்கள் ஆதரித்து காப்பாற்றிவிடக் கூடாது என முலாயமிடம் காரத் கூறியதாகத் தெரிகிறது.

இருப்பினும் முலாயம் சிங் யாதவ் தனது நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ஜூலை 3ம் தேதி நடக்கவுள்ள 3வது அணியின் கூட்டத்திற்குப் பின்னரே எதையும் சொல்ல முடியும் என அவர் கூறி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X