இலங்கை மீண்டும் வெறி - துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் பலி!

Subscribe to Oneindia Tamil
Nagappatinam map
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

தமிழக மீனவர்களை குருவி சுடுவதை போல கொன்று குவிக்கும் அக்கிரமச் செயலில் இலங்கை கடற்படை பல வருடங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களை அவ்வப்போது மாநில அரசுகள் கண்டிப்பதும், மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதும், இலங்கை கடற்படை தனது வெறிச்செயலை தொடருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

சமீபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பெரும் அதிர்ச்சி அளித்தது இலங்கை கடற்படை. பின்னர் அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இன்று இரண்டு நாகை மாவட்ட மீனவர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை கடற்படை.

நாகை மாவட்டம் ஆற்காடு துறை பகுதியைச் ேசர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படை வந்தது.

வந்த வேகத்தில் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் வாசகன், நாராயணசாமி ஆகிய இரு மீனவர்களும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

முரளி என்கிற இன்னொரு மீனவர் குண்டுக் காயம் பட்டு உயிருக்குப் போராடினார். பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து 3 படகுகளில் முரளியின் உறவினர்கள் விரைந்து வந்தனர். பலியான இரு மீனவர்களின் உடல்கள் மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முரளியை மீட்டு கரைக்கு திரும்பினர்.

முரளி உடனடியாக நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இலங்கை கடற்படையின் இந்த வெறிச்செயலால் நாகை மாவட்ட மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...