அணு ஒப்பந்தம்- என்.எஸ்.ஜியை அணுகும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் மன்மோகன்சிங் அரசு, அடுத்து 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணு சப்ளை நாடுகள் அமைப்பை அணுகி, விதிவிலக்கு சலுகையை பெறுவதற்கு ஆதரவு திரட்டவுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பெரும்பான்மையை நிரூபித்து விட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அணு சக்தி ஒப்பந்தத்தை விரைவாக அமல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கவுள்ளது.

முதல் கட்டமாக அணு சப்ளை நாடுகள் அமைப்பை அணுகி, அணு எரிபொருள் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு விதி விலக்கு சலுகையை அளிக்குமாறு கோரவுள்ளது. இதற்கு ஆதரவு திரட்ட மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது.

அதேபோல இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளையும் அணுகி சிபாரிசு சேகரிக்கவுள்ளது இந்தியா.

ஆகஸ்ட் 1ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு உடன்பாட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் எனத் தெரிகிறது.

அதன் பின்னர், அணு சப்ளை நாடுகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

இதுதொடர்பான பணிகளைக் கவனிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், பிருத்விராஜ் செளகான், அனந்த் சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது, இந்தியாவுக்கு ஏன் விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை இக்குழு விளக்கி ஆதரவு கோரும்.

இதுதொடர்பாக அணு சப்ளை நாடுகளின் அரசுகளுடனும் இக்குழு பேசவுள்ளது.

அணு சப்ளை நாடுகளின் அமைப்பு ஒப்புதல் கொடுத்த பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் இந்திய - அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்படும்.

அணு சக்தி ஒப்பந்தம் விரைவாக நிறைவேறுவதற்காக இந்தியாவுடன் இணைந்து பணிகளை விரைவுபடுத்த உதவுவோம் என ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் இனி வேகம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற