For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மகா குழப்பம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தவறான கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருமங்கலத்தை சேர்ந்த எஸ்.செந்தில்குமார் உள்பட 32 பேர் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், 1.8.2007 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுப்பு ஆணையை வெளியிட்டது.

துணை கலெக்டர் போன்ற பதவிகளுக்கு 178 பேரை தேர்ந்தெடுக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 16.12.2007 முதல் 26.12.2007 வரை இதற்காக ஆரம்பகட்ட தேர்வு நடந்தது. இதில் நாங்களும் கலந்து கொண்டோம். 300 மதிப்பெண்ணுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவு 25.4.2008 அன்று முடிவு வெளியிடப்பட்டது.

நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த தேர்வில் குறைந்த மார்க் எங்களுக்கு கிடைத்தது. காரணம், 6 கேள்வி-விடைகள் தவறாக உள்ளன. இந்த கேள்வி-விடைகளின் (சாய்ஸ் விடைகள்) குறைபாடுகளால்தான் எங்களுக்கு மதிப்பெண் குறைவாக கிடைத்துள்ளது.

ஆகவே, அந்த குறிப்பிட்ட கேள்வி-விடைகளை நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைத்து எங்களது விடைத்தாள்களை மதிப்பீடு செய்து சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி பால் வசந்தகுமார், 3 வாரத்திற்குள் ஆட்சேபணைகளை மனுதாரர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்று அரசு தேர்வாணையம் பதில் தெரிவித்தது.

மேலும், கேள்வி-விடைகளில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால், மனுதாரர்கள் தரப்பில் தவறான கேள்வி-விடைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு எத்தனை கேள்வி-விடைகள் உள்ளன என்பதை மனுதாரர்கள் மனுவாக அரசு தேர்வாணையத்திற்கு வரும் 7-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இதை அரசு தேர்வாணையம் பெற்றுக் கொண்டு, இவர்கள் அளித்த கேள்வி-விடைகளையும் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். கேள்விகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சாய்ஸ் விடைகள் வழங்கியது சரிதானா? என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு ஆராய்ந்தபிறகு இவர்கள் சரியான பதில் அளித்திருந்தால் அவர்களுக்கு மார்க் வழங்க வேண்டும். இதற்கு போதுமான காலஅவகாசம் தேவைப்படும். ஆகவே, வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் குரூப்-1 பிரதான தேர்வை மனுதாரர்களை எழுத அனுமதிக்கலாம்.

இவர்களது விடைதாள்களை மதிப்பீடு செய்தபிறகு போதிய கட்-ஆப் மார்க் எடுத்திருந்தால் மட்டுமே இவர்கள் எழுதிய பிரதான தேர்வு பேப்பரை திருத்தலாம். கட்-ஆப் மார்க் பெறாவிட்டால் பிரதான தேர்வின் பேப்பர்களை மதிப்பீடு செய்ய தேவையில்லை. இந்த உத்தரவு மனுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உத்தரவிட்டார்.

பெண்களுக்கு சலுகை அளிக்க எதிர்ப்பு:

இதற்கிடையே, குரூப்-1 தேர்வில் பெண்களுக்கு தனி சலுகைகள் வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு போடப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த விஜயராகவன் பொதுநலன் கருதி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 1.8.2007 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வுக்கு அறிவிப்பை வெளியிட்டது.

பணியிடங்களில் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆண்களைவிட, பெண்கள் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தனி சலுகையானது அதிக மதிப்பெண்கள் எடுத்த ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது அடிப்படை உரிமையும் மறுக்கப்படுகிறது.

ஆகவே, இதற்காக வழிவகை செய்யும் அரசு தேர்வாணையத்தின் விதிமுறையை ரத்து செய்யவேண்டும். இதை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.

அரசியல் சட்டம் 14(2) பிரிவானது இன பாகுபாடு செய்வதை தடுக்கிறது. அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சட்ட விதிமுறைகளை மீறுவதாகும். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது மூலம் எனது உரிமை மட்டுமல்லாமல், எனது வாய்ப்புகளும் பாதிக்கப்படுகிறது.

ஆகவே, இதற்காக உள்ள விதிமுறையை ரத்து செய்யவேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் குரூப்-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. 4 வாரங்களுக்குள் இதுகுறித்து பதில் தரும்படி அரசு தேர்வாணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதசேசமயம், எழுத்து தேர்வுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் கவனத்திற்கு ..

இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ள நில அளவையாளர், வரைவாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.லால்வேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4-ல் அடங்கிய நிலஅளவையாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 10-ந் தேதி 104 மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் தேர்வு மைய விவரம், ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஹால்டிக்கெட்டும், விண்ணப்ப நிராகரிப்பு விளக்கமும் தபால்மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்து 7-ந் தேதி வரை எவ்வித தகவலும் பெறாதவர்கள் அல்லது இணையதளத்தில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8-ம் தேதி மற்றும் 9ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தையும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தையும் அணுகி ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு மாற்று ஹால்டிக்கெட் அல்லது தற்காலிக ஹால்டிக்கெட் பெற வரும் விண்ணப்பதாரர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஓட்டி அதில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று ஒரு கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

சரியான நேரத்தில் விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதாரம் கேட்கப்பட்டால் அதை காண்பிக்க தயாராக இருக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்யவோ, தேர்வு மையம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த கோரிக்கையோ ஏற்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X