For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐ-தலிபான் தொடர்பு: பாக் பிரதமரிடம் யுஎஸ் 'சார்ஜ்ஷீட்'

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் அடங்கிய சார்ஜ்ஷீட்டை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியிடம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வழங்கியுள்ளது.

ஐஎஸ்ஐக்கும், தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாகவும், ஐஎஸ்ஐ பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியா தலைபாடாக அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை கண்டும் காணாமலும் இருந்து வந்தது அமெரிக்கா.

ஆனால் தற்போது தலிபான்களுக்கும், ஐஎஸ்ஐக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், காபூல் இந்திய தூதரகம் மீதான தற்கொலைப் படைத் தாக்குலிலும் ஐஎஸ்ஐயின் தொடர்பு உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை சமீபத்தில் இஸ்லாமாபாத் வந்து சிஐஏ துணை இயக்குநர் ஸ்டீபன் கேப்பஸ் பாகிஸ்தான் அரசிடம் அளித்து இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விட்டுச் சென்றார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியிடம் இதுதொடர்பான புகார் ஒன்றை சிஐஏ தலைவர் மைக்கேல் ஹெய்டன் நேரடியாக வழங்கி, ஐஎஸ்ஐ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இது கிட்டத்தட்ட ஒரு சார்ஜ் ஷீட் போல அத்தனை ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக உள்ளதாம்.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானால் மறுக்கவே முடியாத அளவுக்கு ஆணித்தரமான ஆதாரங்களுடன் சிஐஏ ஆவணங்களைக் கொடுத்துள்ளது. அதில் எந்தெந்த ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு, தலிபான்களுடன் தொடர்பு உள்ளது என்பதை பக்காவாக அமெரிக்கா விளக்கியுள்ளது. இதை நிச்சயம் பாகிஸ்தான் அரசு கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணப் பகுதிகளில் இயங்கி வரும் தலிபான்களுக்கு ஐஎஸ்ஐயின் பூரண ஆசி உள்ளதையும் அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமைதான் கிலானியை, மைக்கேல் ஹெய்டன் சந்தித்து இந்த சார்ஜ்ஷீட்டை வழங்கியுள்ளார். ஐஎஸ்ஐ - தீவிரவாதிகள் தொடர்பை பாகிஸ்தான் அரசு துண்டித்தே ஆக வேண்டும் என அப்போது கண்டிப்பான குரலில் வலியுறுத்தினாராம் ஹெய்டன்.

அமெரிக்காவில் புதிய அரசு வந்தாலும் கூட இந்த விவகாரத்தில் அது மெளனம் காக்காது. எனவே அதற்குள் நீங்களாகவே நடவடிக்ைக எடுத்து விடுங்கள் என அப்போது ஹெய்டன், கிலானியை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐயின் செயல்பாடுகள் குறித்து தன்னை சந்தித்த கிலானியிடம் அதிபர் புஷ்ஷும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் அரசிடம் பல தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவை ஐஎஸ்ஐ மூலம் தீவிரவாதிகளுக்குப் போய் விடுகிறது என்று சற்று கோபமாகவே கூறினாராம் புஷ்.

அமெரிக்காவின் பிடியில் முதல் முறையாக ஐஎஸ்ஐ வசமாக சிக்கியுள்ளதால், அதன் கொட்டத்தை பாகிஸ்தான் அரசு அடக்கியாக வேண்டிய நேரம் வந்துள்ளதாக கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X