பாக். குண்டு-பிதாயீன் இஸ்லாம் பொறுப்பேற்பு
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் நகரில் மேரியட் 5 நட்சத்திர ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிதாயீன்-ஏ-இஸ்லாம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 20ம் தேதி நடந்த பயங்கர தற்கொலை தாக்குதலில் செக் நாட்டு தூதர் உள்பட 60 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பிதாயீன்-ஏ-இஸ்லாம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல் அரேபியா என்ற சேனலின் இஸ்லாமாபாத் நிருபருக்கு போன் செய்து இந்த தகவலை அந்த இயக்கம் தெரிவித்தது.
இது புதிய இயக்கமாக இருக்கலாம். அல்லது திசை திருப்புவதற்காக அல்-கொய்தா நடத்தும் நாடகமாகவும் இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து:
இந் நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லும் அனைத்து விமானங்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இந்த நிறுவனம் வாரத்துக்கு 6 விமானங்களை அந்த நகருக்கு இயக்கி வந்தது.
பாதுகாப்பு நிலைமை மேம்பட்ட பிறகே விமான சேவை தொடரும் என்றும் அந் நிறுவனம் அறிவித்துள்ளது.