For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லயோலா 'சர்வே': நம்பிக்கையில்லை-சரத்

By Staff
Google Oneindia Tamil News

Sarath kumar
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி லோக்சபா தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கும். இந்தியாவில் கருத்துக் கணிப்புகளுக்கு என்றுமே வெற்றி கிடைத்ததில்லை. அவை தோல்வியையே சந்தித்துள்ளன என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டோரின் கட்சிகளால் லோக்சபா தேர்தலில் எந்தவித தாக்கமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'எக்ஸிட் போல்' ஜெயிக்கும்:

தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பலமுறை தோல்வியைத் தழுவி இருக்கின்றன. ஆனால், தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் மக்களிடம் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கின்றன.

நேற்றைய தினமும் இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்காத நிலையில் இந்த கருத்துக் கணிப்புகள் எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பது கேள்விக்குறியாகும்.

தேர்தல் தேதி அறிவித்த பிறகும், கட்சிகளின் கூட்டணி அமைவது பொறுத்தும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்பதுதான் நடைமுறை.

சில கருத்துக் கணிப்புகள், மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் கருத்துக் கணிப்புகள் என்பதைவிட, சிலருடைய விருப்பத்திற்குரிய கருத்துக்களை மக்கள் மனதில் திணிப்பதற்கு முயற்சி செய்யும் வகையில் சில கருத்துக் கணிப்புகள் அமைவதுண்டு.

கருத்துக் கணிப்பில் முரண்பாடுகள்:

லயோலா மக்கள் ஆய்வகம் நடத்திய கள ஆய்விலும், சில கருத்து முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. பாஜக மோசம் என்று 50 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அதே சமயம் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக இடம் பெறும் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக ஏறத்தாழ 8 சதவிகித வாக்குகளை பெற்றது. அதே 2006ம் ஆண்டு கள ஆய்வு செய்த மக்கள் ஆய்வகம் தேமுதிகவிற்கு 21 சதவிகித ஆதரவு இருப்பதாக தெரிவித்தது.

கவிதை எழுதினாரே கருணாநிதி...

ஆனால், அதன்பிறகு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 575 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.

இந்த முடிவுகளை விமர்சித்து தமிழக முதல்வர் கவிதை எழுதியதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன்.

எனவே, ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும்போது ஒரு வாக்காளருக்கு உள்ள மனநிலைக்கும், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் திணிக்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது உள்ள மனநிலைக்கும் வேறுபாடு ஏற்படுவது இயல்பு.

தமிழகத்தில் ஏறத்தாழ சராசரியாக 40 சதவிகித மக்கள் வாக்களிக்க வருவதில்லை. அவர்களிடம் எல்லாம் கருத்துகள் கேட்கப்பட்டனவா? தற்சமயம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டவர்கள் அனைவரும் எல்லாத் தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்தவர்களா? நாட்டின் அசாதாரணமான நிலை கருதி அவர்கள் எல்லாம் வாக்களிக்க முன்வந்தால், எத்தகைய வகையில் ஆதரவுகள் இருக்கும் என்பதை இப்போது யாராலும் யூகிக்க முடியுமா?

அதேபோன்று கடந்த ஆண்டு இதே மக்கள் ஆய்வகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 41 சதவிகித மக்கள் சரத்குமார் கட்சி தொடங்கமாட்டார் என்றும், திமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்வார் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கொண்டுள்ள

நம்பிக்கை இல்லை:

கருத்துக்களைப்போல் எங்களுக்கும் இத்தகைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை.

சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில், வன்முறையின்றி தேர்தல் நடைபெறாது என்பதால்தான் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தோம். அதையும் மீறி 9 இடங்களில் போட்டியிட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதுபோன்றே போட்டியிட்ட தேமுதிக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் 2.5 சதவிகிதம் இருக்கும் என்றும், சில இடங்களில் 14.8 சதவிகிதம் இருக்கும் என்றும் மக்கள் ஆய்வக கருத்துக்கணிப்பில் விவரம் வெளியிட்டுள்ளார்கள்.

மாற்றத்தை நிரூபிப்போம்:

100 ஆண்டு கண்ட காங்கிரஸ் கட்சிக்கே 3.5 சதவிகிதம் ஆதரவு என்று தெரிவித்துள்ளார்கள். ஓராண்டை நிறைவு செய்துள்ள சமத்துவ மக்கள் கட்சி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயம் ஒரு மாற்றத்தையும், பலத்தையும் நிரூபித்துக் காட்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X