யுஎஸ்சிலிருந்து பிரான்ஸ் கிளம்பினார் மன்மோகன்

அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விடும். அதில் கையெழுத்திட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் அங்கு பயணம் ேமற்கொண்டிருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் பெரும் ஏமாற்றமாக, நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த ஏமாற்றத்துடன் கடந்த 25ம் தேதி அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார் பிரதமர். பின்னர் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத ஏமாற்றத்துடன் இன்று அமெரிக்காவை விட்டு பிரான்ஸ் கிளம்பிச் சென்றார் மன்மோகன் சிங்.
29ம் தேதி மார்ஷெல் பகுதியில் நடைபெறும் இந்திய - ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர்அடுத்த நாள் இந்திய - பிரெஞ்சு இருதரப்பு மாநாடு நடைபெறுகிறது. அப்போது பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்த நிலையில், பிரதமரின் அமெரிக்க பயணம் வெற்றிகரமானதாக இருந்ததாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாவிட்டாலும் கூட, இரு நாடுகளையும் இந்தப் பயணம் மேலும் நெருங்கி வர உதவியுள்ளது.
உண்மையில் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கில் பிரதமர் அமெரிக்க பயணத்தை மேற்கொள்ளவில்லை. இந்தப் பயணத்தின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேர்ந்தால் சிறப்பாக இருந்திருக்கும், அவ்வளவுதான் என்றார் அவர்.