அனைத்து கட்சி கூட்டம்: தேமுதிகவும் புறக்கணிக்கிறது
சென்னை: ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த ஆலோசிக்க முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக முதல்வர் கருணாநிதி 14ம் தேதி நடத்த உள்ள அனைத்துக் கட்சி கூட்டம் எதற்கு என்று புரியவில்லை. உள்ளாட்சி முதல் மத்திய அரசு வரை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் ஆட்சி செய்கின்றன.
எனவே செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ள திமுக ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை விரைந்து செய்ய கடமைப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களின் பிரச்சனை தீர தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி என்று 1983 முதல் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அவர் விரும்புகிற அரசியல் தீர்வை உடனடியாக பெற்றுத் தர வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் எங்களை போன்றவர்கள் கலந்து கொண்டபோது இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்களும் அரைகுறை ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டத்து ஒரு சுமூக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா?
1956 முதல் இலங்கை தமிழர்களுக்காக உண்மையாக பாடுபடுவது திமுகதான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்ற கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத்தானே அர்த்தம். உண்ணாவிரதத்துக்கு போட்டியாக பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று அறிவித்தபோது அனைத்துக் கட்சிகளை பற்றிய சிந்தனை இல்லாதது ஏன்?
1974ம் ஆண்டு கச்சத்தீவை ஏன் தாரை வார்த்தீர்கள் என்று கேட்டால் அப்போது நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை சாட்சிக்கு அழைக்கிறார். அதேபோல இலங்கை தமிழர் பிரச்சனையிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை பயன்படுத்த எண்ணுகிறார் என்றே கருதுகிறேன்.
இலங்கை அரசுக்கு இந்தியா ராடரார் போன்ற கருவிகள் தந்து உதவியதை கருணாநிதி கண்டிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை சொந்த காரணம் காட்டி சொந்த பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளும் ஜெயலலிதாவின் போக்கை தேமுதிக ஆதரிக்கவில்லை.
அதேபோல இலங்கை அரசுக்கு ரகசிய உதவி செய்வதையும் அதற்கு துணைபோகும் திமுகவையும் கண்டிக்கிறோம்.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தொலை தொடர்புத் துறை ஊழல் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைத்திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை கருணாநிதி கையில் எடுத்துக் கொண்டார். எனவே அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காது என்று கூறியுள்ளார்.