For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கள அரசுக்கு ஜெ ஆதரவு-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகரே கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வைகோ வராவிட்டாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை அவரும் ஏற்று கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்று கூறியிருக்கிறார்?

பதில்: ஆம். அவர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது நமக்குப் புல்லரிக்கிறது. வரவேற்கத்தக்க அறிவிப்பு. ஆனாலும் ஒன்று, 'திமுகவினர் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்தும் விலக வேண்டும்' என்று அவர் கூறியிருக்கிறார்.

எம்.பி. பதவியிலிருந்து விலகினாலே; அமைச்சர் பதவியும் தானாகவே போய் விடும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நாம் எடுத்த முடிவு கண்டு அங்கமெலாம் பதற அம்மையார் ஜெயலலிதா விடுத்துள்ள அனல் கக்கும் அறிக்கையில் "இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன'' என்று குறிப்பிட்டிருக்கிறாரே?

பதில்: அம்மையாரின் இந்த அறிக்கையை வைகோ ஏற்றுக் கொள்கிறாரா?

கேள்வி: மக்களவை உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய அமைச்சர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட அதில் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்: அம்மையார் முதலில் அந்தத் தீர்மானத்தை மீண்டும் மீண்டும் படித்து தெளிவு பெற வேண்டுகிறேன். "தீர்மானங்கள் செயல் வடிவம் பெறவும், இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன் வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்'' என்று தான் தீர்மான வாசகம் இருக்கிறதே தவிர, 'மக்களவை உறுப்பினர்கள்' என்று இல்லை. 'நாடாளுமன்ற உறுப்பினர்கள்' என்பதில் மாநிலங்களவை உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் அடங்குவார்கள் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை.

மாநிலங்களவை உறுப்பினர்க்கும் அத்தீர்மானம் பொருந்தும் என்பதால் தானே, திருமதி கனிமொழி 29.10.2008 தேதியிட்டு தனது பதவி விலகல் கடிதத்தை இன்னும் இரண்டு வாரக்காலக் கெடு இருந்தபோதிலும் முன் கூட்டியே அனுப்பியிருக்கிறார்.

கேள்வி: தமிழினத்தை இலங்கையில் அழிந்து போகாமல் காப்பாற்ற தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை - கண் துடைப்பு நாடகம் - கபட நாடகம் - மோசடி நாடகம் - செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா அதே அறிக்கையில் "கபட நாடகம்'' என்ற சொற்றொடரை மட்டும் பத்து இடங்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறார்; அதோடு விடாமல் "தனக்கும் கபட நாடகத்தை அரங்கேற்ற தெரியும் என்பதை கனிமொழி நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருப்பதாக'' ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளது பற்றி?

பதில்: "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'' - இந்தக் குறளின் பொருளை அம்மையார் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாகும்.

கேள்வி: "உண்மையிலேயே கனிமொழிக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், ராஜ்யசபா தலைவரிடம் தன் ராஜினாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டுக் கொடுத்திருக்க வேண்டும்'' என்கிறாரே ஜெயலலிதா?

பதில்: அனைத்துக் கட்சித்தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு உரிய விளைவு ஏற்பட, அந்தக் கூட்டத்திலேயே, அந்தத் தீர்மானத்திலேயே இரண்டு வாரங்கள் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெயலலிதா காலக்கெடுவைப் பற்றிக் கவலைப்படாமல் ராஜினாமா கடிதத்தை உடனடியாக மாநிலங்கள் அவைத் தலைவரிடம் கனிமொழி ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார். ஜெயலலிதாவின் அவசரத்திற்குக் காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மீதுள்ள அக்கறை அல்ல; கனிமொழி எப்படியாவது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியிலிருந்து இந்தக் காரணத்தையொட்டி வெளியே வந்துவிட மாட்டாரா என்ற நல்லெண்ணம் (!) தான் காரணம்.

கேள்வி: "பொழுது போக்குக் கூட்டம் போல அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது'', மத்திய அரசுக்கு இரண்டு வாரகால அவகாசம் கொடுத்திருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: தமிழகத்திலே உள்ள இருபதுக்கு மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டு மூன்றரை மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு விவாதித்த கூட்டத்தை அம்மையார் பொழுது போக்குக் கூட்டம் என்கிறார்!. இதற்கு அந்தத் தலைவர்கள் தான் பதில் கூற வேண்டும்.

கேள்வி: தற்போது மத்தியிலே உள்ள அரசு கருணாநிதி சொன்னதைச் செய்யக் கூடிய அரசு என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதைப் பற்றி?

பதில்: வாஜ்பாய் அமைச்சரவையிலே அதிமுக அங்கம் வகித்தபோது பிரதமரை ஒரு நாள் கூட அமைதியாகத் தூங்க விடாமல் செய்தவர் ஜெயலலிதா. அதற்கு மாறாக தற்போதுள்ள கூட்டணி அரசு செயல்படுகிறது என்பதைச் சொல்கிறார் போலும்!.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் பற்றியும் கருத்து வெளியிட்டு அறிக்கை வழங்கியுள்ள ஜெயலலிதா மத்திய அமைச்சர்கள் மூலமாக கருணாநிதிக்கு வருமானம் வருகிறது என்று கூறியுள்ளாரே?

பதில்: தன்னைப் போலவே பிறரை நினைக்கும் தயாபரி அல்லவா, ஜெயலலிதா!

கேள்வி: கருணாநிதியின் கபட நாடகத்தைக் கண்டு தமிழர்கள் ஏமாறத் தயாராக இல்லை என்று அறிக்கையிலே ஜெயலலிதா சொல்கிறாரே?

பதில்: 'கபடம்' என்றால் 'வஞ்சகம்' என்று அகராதியில் பொருள் கூறப்பட்டுள்ளது. அந்தப் பொருளுக்கு தமிழகத்திலே பொருத்தமானவர் யார் என்பதை தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.

கேள்வி: ஜெயலலிதாவின் அறிக்கையை யாராவது பாராட்டுவார்களா?

பதில்: ஏன் பாராட்ட மாட்டார்கள்?. இதோ, இன்று வெளிவந்துள்ள 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய தீர்மானத்திற்குப் பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையைப் பாராட்டி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபக்சே என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

''நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை ஞாபகத்திலே வைத்துக் கொள்ளுங்கள்''.

இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும் போது, தமிழா! இப்போதாவது புரிகிறதா? உண்மையில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் போடுவது யார் என்று?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X