For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை-பேச்சுவார்த்தையில் ஈடுபட கருணாநிதி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் அமைதி ஏற்பட இரு தரப்பினரும் பேச்சுவார்ததையில் ஈடுபட வேண்டும். அதற்கு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து மாமல்லபுரம் வரையிலான 47 கிமீ ராஜீவ் காந்தி சாலையில், சிறுசேரி வரையிலான 20 கி.மீ. சாலை ரூ. 279 கோடி செலவில், 6 வழிப் பாதையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாலையின் திறப்பு விழா, சோழிங்கநல்லூர் சந்திப்பில் நேற்று நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

தேசியத்திற்காகப் பாடுபட்டு தியாகம் செய்தவர்களை திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் என்றைக்கும் ஒதுக்கிப் பார்த்த தில்லை. தியாகம் எங்களையும், அவர்களையும் ஒன்றுபடுத்தியிருக்கிறது.

அந்த வகையிலே தான் நான் பெருந்தலைவர் காமராஜருடைய பெயரை சட்டப்பூர்வமாகவே கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தேன்.

வேறு கட்சியைச் சேர்ந்தவர், அவருடைய தியாகத்தை நாம் மதிக்கத் தேவையில்லை என்று கருதுகின்ற வழக்கம் எங்களுக்கு இல்லை, எங்களை எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அப்படி பழக்கவும் இல்லை.

எனவே தான் இன்றைக்கு இந்தியத் திருநாட்டின் இளந் தலைவர் ராஜீவ் காந்தியின் பெயரை இந்தச் சாலைக்கு சூட்டியிருக்கிறோம். இந்த மண்ணில் அவர் சிந்திய ரத்தம், அதற்கு நாம் அளிக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, நாம் செலுத்த வேண்டிய நன்றி, நாம் போற்றிட வேண்டிய கண்ணியமான நினைவு அதை எண்ணித் தான் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவிலே அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலைக்கு அந்தப் பெருமகனுடைய பெயரைச் சூட்டியிருக்கிறோம்.

அந்த ராஜீவ் காந்தி இன்றைக்கு நாம் பேசிக் கொண்டிருக்கிற இலங்கைப் பிரச்சினையில் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஆதாரப்பூர்வமாக என்னிடம் இருக்கின்றன.

1989ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருந்த அந்தக் காலக் கட்டத்திலேயே கோவையிலே நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி ராஜீவ் காந்தி பேசியிருக்கிறார். அது முரசொலியிலோ அல்லது திமுக ஏடு ஒன்றிலோ வந்த செய்தி அல்ல. 6.11.1989 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே வந்த செய்தி.

"இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முழு ஒத்துழைப்பு தந்து வருவதற்காக திமுக அரசுக்கு ராஜீவ் காந்தி பாராட்டு தெரிவித்தார்'' என்று ராஜீவ் காந்தி கோவைக் கூட்டத்திலே பேசியிக்கிறார்.

அதைப் போலவே திருச்சியிலே 5.11.1989 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் திமுக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்'' என்று செய்தி வந்தது.

ஆக இலங்கைப் பிரச்சினையிலே இந்த அரசும், மத்திய அரசும் ஒத்துப் போவது என்பது இன்றல்ல, அன்றைக்கே தொடங்கிய ஒன்று தான் என்பதற்காகத் தான் இந்த ஆதாரங்களை இந்த நேரத்தில் ராஜீவ் பெயரால் ஒரு சாலை தொடங்கப்படுகின்ற நேரத்தில் எடுத்துச் சொல்வது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.

திமுக அரசு எடுத்திருக்கிற நிலை, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது. நாங்கள் வேறு நிலை எதுவும் எடுக்கவில்லை. அன்றைக்கு எந்தக் கொள்கையைக் கொண்டிருந்தோமோ, அதே கொள்கையைத் தான் இன்றைக்கும் கொண்டிருக்கிறோம்.

போர் இல்லாத ஒரு சூழ்நிலை இலங்கையிலே உருவாக வேண்டும். அமைதி உருவாக வேண்டும். அந்த அமைதியை உருவாக்குவது யாராக இருந்தாலும் சரி, அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அந்த அமைதியை உருவாக்க மத்திய அரசோடு நாம் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாநில அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற எனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.

இப்படி ஒத்துழைக்கிறேன், ஒத்துழைக்கிறேன் என்று சொல்கிறானே, எனவே ஒற்றுமையாகவே இருந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று சில பேருக்கு சங்கடம், சில பேருக்கு வருத்தம், சில பேருக்குக் கவலை, சில பேருக்கு வாட்டம், சில பேருக்கு வேதனை, சில பேருக்கு ஒரு அருவருப்பு.

அவர்கள் தேர்தலை மனதிலே வைத்து பிரச்சினையை அணுகுகிறார்களே அல்லாமல், தமிழ் மக்களுடைய உயிர்களை மையமாக வைத்து இந்தப் பிரச்சினையை அணுகவில்லை.

ஆனால் சென்னையிலே வந்து என்னைச் சந்தித்த வெளியுவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எங்களைச் சந்திக்க வைத்த சோனியா காந்தி ஆகியோருக்கு தமிழர்களுடைய சிக்கல் தீர வேண்டும், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சங்கடம், துன்பம் அகல வேண்டும் என்பதிலே தான் அக்கறை.

அதனால் தான் நாங்கள் துப்பாக்கிக்கு துப்பாக்கி, பீரங்கிக்கு பீரங்கி, போர் விமானத்திற்கு எதிர் விமானம் என்றெல்லாம் இல்லாமல் ஏற்கனவே பேசிய சமரசத்தைப் போலப் பேசி, அந்த நாட்டிலே அமைதி, ஜனநாயகம் பூத்துக் குலுங்கக் கூடிய ஒரு வழியை உருவாக்க வேண்டும், அதற்கு இந்தியாவோடும், இந்தியாவோடு சேர்ந்து தமிழ்நாடும் இருப்பதால் தமிழ்நாடும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது என்பது தான் இன்றைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலை.

நான் ராஜீவ் காந்தியின் பெயரால் சாலையைத் திறந்து வைக்கும் நேரத்தில் இலங்கைக்கு ஏன் போனேன் என்றெல்லாம் நீங்கள் வியப்படைவீர்கள்.

இலங்கையை எண்ணும்போது ராஜீவ்காந்தி நினைவுக்கு வருகிறார். ராஜிவ் காந்தியின் பெயரால் சாலை திறக்கும்போது இலங்கையை நினைவு கூர்கிறோம். இலங்கை நினைவுக்கு வரும்போது அங்கே வாடிக் கொண்டிருக்கின்ற ஏழையெளிய குழந்தைகள், தாய்மார்கள், சேலை இல்லாமல் ஆடை இல்லாமல், வேட்டி இல்லாமல் துண்டு இல்லாமல், படுக்க பாய் இல்லாமல், தின்னச் சோறு இல்லாமல், தூங்க ஒரு வீடு இல்லாமல் மழையில், வெயிலில் அங்கே அனாதைகளாய், அபலைகளாய் அந்த நாட்டிலேயே வாழ முடியாமல் இந்தியாவிற்கு அனாதைகளாக வருகின்ற அந்தக் காட்சியெல்லாம் நம் கண் முன்னே தெரிகிறது.

அந்தக் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். நாம் நம்முடைய கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்ற காலம் வெகு விரைவிலே வர வேண்டும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X