For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருப்போடு விளையாடதே!-ஜெவுக்கு வந்த மிரட்டல் கடித விவரம்

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே! நெருப்போடு விளையாடதே!. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டுள்ள மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

மேலும் இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக வழக்கறிஞர்களான நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் அறைக்கு சென்று அவரிடம் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதத்தின் நகலை சமர்ப்பித்தனர்.

மேலும் அவர்கள் நீதிபதியிடம் அளித்த மனுவில், இது மிகவும் சீரியசான கடிதம். ஏற்கனவே நீதிமன்றம் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து எஸ்பி நிலையிலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் வீட்டிற்கு எஸ்பி வந்து விசாரணை செய்துவிட்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த கடித நகலை உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடமும் வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கிற்கான நோட்டீசும் அரசு வழக்கறிஞரிடம் வழங்க உத்தரவிட்டார்.

அந்தக் கடிதம்:

கனடாவில் உள்ள உலகத் தமிழ் இன பாதுகாப்பு கழகத்தின் தாய்லாந்து கிளையின் ஆசிய திட்ட அலுவலர் வெ.தமிழ்மைந்தன் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டுக்கு நேற்று காலையில் இந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.

அந்த கடிதத்தில்,

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டாமென செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இறுதி எச்சரிக்கை. செல்வி, நீ உன் வேலையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு இருக்கவும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பற்றி தமிழ்நாட்டில் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். உன் நன்மைக்காக வேண்டி எச்சரிக்கிறோம்.

அம்மணி நீ தேவையில்லாமல் விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அல்லது மூக்கு நுழைத்தால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும் என்பதை உனக்கு இறுதியாக உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கிறது.

உனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். இனி வரும் காலத்தில் உன் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமில்லை என்றால் பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் வரும்.

தமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே! நெருப்போடு விளையாடதே!. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல.
எங்களின் ஆற்றல் மிக்க மன உறுதியின் வெளிப்பாடு, எங்கள் ஆதங்கம் உனக்கு புரிந்தால் சரி. புலிகளின் தாகம் தனி தாயகம். இதுதான் எம்மக்களின் வேட்கை. இதை தடைபோட எவர் நினைத்தாலும் அவர்களை அழிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஏமாந்த அதிமுக கட்சிக்காரர்களுக்கு தலைவியாக நீ இருந்து கொண்டும், சில ஏமாளித் தமிழர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும், உலக அரசியல் நடப்புத் தெரியாத தமிழ் உணர்வு இல்லாதவர்களுக்கும் நீ தலைவியாக இருந்து கொண்டும் அரசியல் நடத்தி பிழைத்துக்கொள். நீயொரு கன்னடப் பெண்மணி.

வெறும் பகட்டுக்கும், பணத்திற்கும், பதவிக்கும் வேண்டி உன்னிடம் ஒரு அடிமையைப் போல் இன உணர்வு அற்று சில தமிழர்கள் உனக்கு விசுவாசமாக இருக்கலாம். அதற்காக வேண்டி மொத்த தமிழ்நாடே உனக்கு அடிமையென்று எண்ணிவிடாதே. இறுமாப்புக் கொள்ளாதே! கர்வம் கொள்ளாதே.

எங்களைப் பொறுத்தவரை நீயொரு நடிகை. அரசியல் பொது வாழ்விலும், உன் நடிப்பும் உலகுக்கு தெரிகிறது. உலக அரசியல் வரலாற்றில் வீராவேசம் பேசியவர்கள் வாழ்ந்ததில்லை. மீண்டும் எச்சரிக்கிறோம், இலங்கையில் தன் இனம் காக்கவும், தன் சொந்த மண்ணின் உரிமைக்காக போராடும் தமிழ் ஈழ போராட்டவாதிகளின் உண்மை உணர்வை எழுச்சியை, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாதே!.

விடுதலைப் புலிகளின் தனி ஈழம் கொள்கையை உன்னைப் போன்று ஆயிரமாயிரம் முதல்மைச்சர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த இயலாது. கட்டுப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகளை நேசிக்கும் அல்லது ஆதரிக்கும் அல்லது தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் உலகில் வாழும் 75 நாடுகளில், 6 கோடிக்கு மேல் தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டையும் சேர்த்து இருக்கிறார்கள். அதற்காக வேண்டி நிதி உதவி செய்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா? இதுவே உனக்கு இறுதி எச்சரிக்கை. உன்னை இறுதி யாத்திரைக்கு அனுப்ப எங்களுக்கு அதிக நேரமில்லை. அதிக காலம் தேவையில்லை. நீயொரு பெண் என்பதற்காக வேண்டி இவ்வளவு காலம் பொறுமையாகக் கடைப்பிடித்தோம்.

இதற்குமேல் நடப்பதை யார் அறிவார்? விடுதலைப் புலிகளை உலகில் யார் அழிக்க நினைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் சரி, அத்தகையவர்களை நாங்கள் அழிக்கத் தயங்க மாட்டோம் என்பது உண்மை.

எங்கள் போராட்டத்திற்கு முன்னால் நீயொரு தூசி. தமிழன் என்றொரு தனி இனம். அவன் குணமும் தனி என்பதை உணர்ந்து உன் தவற்றை இனிமேல் திருத்திக்கொள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனரிடம் மனு:

இந்தக் கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனர் சேகரிடம் நேற்று மாலை மனு கொடுக்கப்பட்டது.

முன்னாள் சட்ட அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான டி.ஜெயக்குமார் கமிஷனர் சேகரை சந்தித்து இது தொடர்பாக பேசினார்.

பின்னர் மனு ஒன்றையும் கொடுத்தனர். அதில்,

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு 30ம் தேதியன்று (இன்று) ஜெயலலிதா செல்ல இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தின் மீது காவல்துறை உடனடியாக கவனம் செலுத்தி, இந்த கடிதத்தை அனுப்பியவர் யார்? இதற்கு பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உரியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், ஜெயலலிதாவுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதே மனுக்கள் தமிழக அரசின் முதன்மை உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயனும், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் நேற்று மாலையில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் உதவி கமிஷனர் ரவீந்திரனை சந்தித்தும் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

முன்னதாக ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னரே இது கடிதமாகவே வந்தது தெரியவந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X