For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சர்கள் ராஜினாமா நேரம் வந்துவிட்டது-அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கிடையாது என அதிபர் ராஜபக்சே அறிவித்துவிட்ட நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன தான் செய்யப் போகிறது என பல்வேறு கட்சிகளும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பின.

அதன் விவரம்:

ஜி.கே.மணி (பாமக): இலங்கை அதிபர் ராஜபக்சே போர் நிறுத்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேசியது என்ன என்பது பற்றி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும். அது என்ன என்று முதல்வர் விளக்குவாரா?.

அந்த அடிப்படையில் இந்த பிரச்சனையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): இலங்கை அதிபர் போர் நிறுத்தம் செய்ய மாட்டேன். அதே சமயம் அங்குள்ள தமிழர்களை காப்பாற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.

இது பொருத்தமற்றது. அப்பாவி தமிழர்கள் குண்டுவீசி கொலை செய்யப்படுவதும், கோயில்கள், பள்ளிகளில் குண்டுவீச்சு நடைபெறுவதும் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ராஜபக்சேவின் கருத்தை ஏற்க முடியாது.

இதில் நாம் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படும். எனவே பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு என்ன கருத்தைக் கொண்டிருக்கிறது, பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார், அங்குள்ள தமிழர்களை எப்படி பாதுகாக்க போகிறோம் ஆகிய விவரங்களை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.

கண்ணப்பன் (மதிமுக) 8 கோடி தமிழர்கள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்று முதல்வர் கூறினார். தீர்மானத்தை முதல்வர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகளை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியபோது போர் நிறுத்தத்தை பிரதமர் வலியுறுத்தியதாக தெரியவில்லை.

எனவே, பேரவை தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து முதல்வருக்கு தகவல்கள் வந்திருக்கலாம். இப்போது தமிழகம் கொந்தளிப்பான நிலையில் உள்ளதால் அது பற்றி முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): ராஜபக்சே இந்தியாவுக்கு வந்திருக்கும் இதே நேரத்தில் அவரது சகோதரர் சீனா சென்று ஆயுதம் வாங்குகிறார். இலங்கை தமிழர்களை அழிப்பது தான் அவர்களுடைய எண்ணம் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஞானசேகரன் (காங்கிரஸ்): இங்கே பேசியவர்கள் தமிழகம் கொந்தளிக்கும் என்றெல்லாம் கூறினார்கள். இலங்கை ஒரு தனி நாடு. அதன் இறையாண்மையில் நாம் தலையிட முடியாது. மாநில அரசு மத்திய அரசு மூலம் தான் உணர்வுகளை தெரிவிக்க முடியும். அதற்காக தமிழ்நாடு கொந்தளிப்பது என்று கூறுவது சரியாகாது.

நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், இங்கு பேசுபவர்கள் நாம் நேரடியாக ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்ற வெறியை வெளிப்படுத்துகிறார்கள். இது சரியாக இருக்காது என்றார்.

ஞானசேகரனின் இந்தப் பேச்சுக்கு பா.ம.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிடவே, பாமகவினரும் எழுந்து நின்று பதிலுக்கு கோஷமிட்டனர். பாமகவுக்கு ஆதரவாக மதிமுகவினரும் குரல் கொடுத்தனர்.

இதையடுத்து ஒருவருடன் ஒருவர் வாக்குவாததிலும் இறங்கியதால் பெரும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்துப் பேசிய மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு என்ன தான் செய்ய போகிறது?.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். கச்சத் தீவு பிரச்சினையை கூட நான் ஆழமாக பேசவில்லை. தற்போது ராஜபக்சே 3 நாள் டெல்லியில் தங்கி இருந்தும் இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் புரிந்து கொண்டு இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்; ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் மத்திய அரசு சொல்லி இருக்க வேண்டும்.

புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில் ராணுவம் போரை நிறுத்தாது என்று ராஜபக்சே அறிவித்திருப்பது, தமிழர்களின் உணர்வுகளில் இடி விழுந்தது போன்ற பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் விதித்த கெடுவை நிறைவேற்றவும் இது தான் சரியான தருணம். குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் பதவியை தூக்கி எறிய வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும்.

திமுக தவிர காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை தூக்கி எறிய வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நல்ல முடிவை எடுத்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.

ஜி.கே.மணி: இலங்கைத் தமிழர் பிரச்சனையை சிக்கல் ஏற்படுத்தும் வகையில் ஞானசேகரன் பேசக்கூடாது.

ஞானசேகரன்: உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். பிரபாகரன் ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயார்.

இதையடுத்து பாமக எம்எல்ஏக்கள் மீண்டும் எழுந்து நின்று ஞானசேகரன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X