For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் வெட்டுக்கு அதிமுக தான் காரணம்-விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

தேனி: தமிழகத்தில் இன்று நிலவும் மின் வெட்டுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் மின் உற்பத்திக்கான திட்டம் எதுவும் போடப்படாதது தான் காரணம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

தேனி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கம்பம் நகரில் 54 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருமணங்களை விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா நடத்தி வைத்தனர்.

பின்னர் விஜயகாந்த் பேசியதாவது:

விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இதை சொல்லிக் கொண்டே அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப்போட்டு விடாதீர்கள். அந்த இரு கட்சிகளுக்கும் மாறி, மாறி ஓட்டுப்போட்டு அலுத்து போச்சு. மாறி, மாறி ஆட்சி அமைத்த இவர்கள் என்ன செய்தார்கள். மாறி, மாறி வறுமையை தான் மக்களுக்கு கொடுத்தனர்.

ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்ட மக்கள், தற்போது 2 முறை தான் சாப்பிடுகின்றனர். இதற்குக் காரணம் விலைவாசி ஏற்றம் தான். மின்சார தட்டுப்பாடு, சுகாதார வசதி இல்லாமை போன்ற பிரச்சினைகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன.

மின்சாரமே இல்லை. ஆனால், 40 லட்சம் இலவச கலர் டி.வி. மக்களுக்கு வழங்கப்படும் என்பது தேவை தானா?. அரசு வழங்கும் டிவிக்களை வாங்கியவர்கள் அண்டை மாநிலங்களுக்கு விற்கிறார்கள்.

கிடைக்காதவர்களுக்கு நான் யோசனை சொல்கிறேன். நீங்கள் 5 ரூபாய் கொடுத்து திமுக உறுப்பினரானால் உடனே உங்களுக்கு இலவச கலர் டி.வி. கிடைக்கும்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேஷன் அரிசி தரமானதாக போடப்படுகிறது என்று அமைச்சர் வேலு கூறுகிறார். அமைச்சரின் கண்ணை கட்டிவிட்டு ஒரு ரேஷன் கடையில் கொண்டு போய் விடுகிறேன். அங்கு அவர் ஆய்வு செய்து பார்க்கட்டும்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 4 லட்சம் போலி ரேஷன்கார்டுகள் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த கார்டுகளை அதிமுக, திமுக கட்சிக்காரர்கள் தானே வைத்திருக்கிறார்கள்.

மின்சார வெட்டை கண்டித்து அதிமுகவினர் தினந்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மின்வெட்டுக்கு அவர்கள் ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்திக்கான திட்டம் எதுவும் போடப்படாதது தான் காரணம்.

இதைச் சொன்னால் அதிமுக ஆட்சியில் மின்சார அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்கிறார். நான் ஒரே மேடையில் இல்லை, அவரை ஒரே தொகுதியில் சந்திக்கக் கூடத் தயார்? அவர்கள் தயாரா?.

தேர்தலே வரவில்லை. அதற்குள் கூட்டணி பற்றி கேட்கிறார்கள். கூட்டணி வைக்க வேண்டும் என்றால், எங்கள் கட்சி தொண்டர்களிடம், நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் கேட்டுவிட்டுத் தான் முடிவெடுப்பேன்.

திருமண உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை உட்பட எந்த உதவித் தொகையும் கிடைக்காமல் ஏழை மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அப்படியே கூட்டணி வைத்தாலும் இவர்களுக்கு எல்லாம் உதவித் தொகை வழங்க எந்த கட்சி முன் வருகிறதோ அந்தக் கட்சியுடன் தான் கூட்டணி வைக்கப்படும்.

இங்கு கூடியிருக்கும் பெண்கள் காய்கறிகளை கூட யோசித்து தான் வாங்குகிறீர்கள். அதே போல வரும் தேர்தலில் கட்சிகளை தரம்பிரித்து பார்த்து வாக்களியுங்கள். மாற்றம் வேண்டும் என்றால் நடந்தே தீரும் என்றார் பெரியார். அவர் சொன்னபடி மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தினை நாம் தான் கொண்டு வரவேண்டும்.

விலைவாசி உயர்வு பற்றி கேட்டால் இலங்கை பிரச்சனையைக் கூறி திமுக அரசு திசை திருப்புகிறது. முல்லைப் பெரியாறு அணையில் 2 அடி நீர் மட்டம் உயர்த்துவதற்கான முயற்சிகளை கூட ஆளும் கட்சி, எதிர்கட்சியால் செய்ய முடியவில்லை. அமைச்சர் துரைமுருகன் அவ்வப்போது அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்.

மணல் கொள்ளை, அரிசி கடத்தல், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X