For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன பால் தாக்கரே-ராஜ் தாக்கரே எங்கே!?

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை நகரில் தீவிரவாதிகள் அராஜக அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்தபோது மராத்தியர்களின் அடையாளமாக தன்னை வர்ணித்துக் கொள்ளும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே, அவரது மகன் உத்தவ தாக்கரே, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே எங்கிருந்தனர் என்றே தெரியவில்லை.

சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆன நிலையில் அந்த இடங்களைப் பார்வையிடக் கூட அவர்கள் வரவில்லை.

மும்பைக்குள் தீவிரவாதிகள் புகுந்து அவர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போராடிக் கொண்டிருந்தபோது ஒட்டுமொத்த தேசமும் பதறிப் போய் டிவிகளின் முன்பு திரண்டிருந்தது. உலகமே இந்த கோர தாண்டவத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருந்தது.

மும்பையில் வசித்தவர்கள் எல்லாம் ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டனர். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த ஹோட்டல்கள் இருந்த பகுதிகளில் மக்கள் அலை அலையென திரண்டு வந்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் மும்பை பற்றி எரிந்த அந்த மூன்று நாட்களும் ராஜ் தாக்கரோவின் சந்தடியே இல்லை.

மும்பையின் காவலன் நான், மகாராஷ்டிர மக்களைக் காக்க வந்த அவதாரம் என்று தன்னைத் தானே வர்ணித்துக் கொண்டு, மகாராஷ்டிர மக்களுக்கே மகாராஷ்டிரா என்ற முழக்கத்தோடு, வட இந்தியர்களின் மீதான வெறித் தாக்குதலை ஊக்குவித்தவர் ராஜ் தாக்கரே.

இந்த நிலையில் அவரது மும்பை முடங்கிப் போயிருந்த அந்த நெருக்கடியான நிலையில், அவரிடமிருந்து ஒரு ஆறுதலான வார்த்தை கூட வரவில்லை.

ராஜ் தாக்கரே மும்பையில்தான் இருக்கிறாரா என்று பலருக்கும் சந்தேகம்.

சாதாரண விஷயத்துக்கெல்லாம் ரணகளப்படுத்தும் போராட்டங்களை அறிவிக்கும், ஆதரிக்கும் ராஜ் தாக்கரே, மும்பை மாநகரமே கோரப்பிடியில் சிக்கித் தவித்த அந்த நேரத்தில் எங்கே போனார், ஏன் ஒரு வார்த்தை கூட அவரிடமிருந்து வரவில்லை என்ற கேள்விகள் ஒவ்வொரு மும்பைவாசியின் மனதிலும் முட்டி மோதியது.

தீவிரவாதிகளைக் கண்டிப்பார், மும்பை மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று ஒரு வார்த்தை கூறுவார், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து நலம் விசாரிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ராஜ் வரவே இல்லை.

சொந்த நாட்டைச் சேர்ந்த, சக மாநிலத்தவர்கள் மீது விஷத்தைக் கக்கிய தாக்கரே, அந்நிய நாட்டிலிருந்து வந்து கிட்டத்தட்ட படையெடுத்ததைப் போல மும்பை மீது தாக்குதல் நடத்தியதை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்விக்கும் ராஜ் தாக்கரேவிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

இந்த விரக்தியான கேள்விகள் எல்லாம் கோபமான எஸ்.எம்.எஸ்களாக மாறி ராஜ் தாக்கரே எங்கே என்ற கேள்வியுடன் நாடு முழுவதும் உலா வரத் தொடங்கியுள்ளது.

பல்வேறு பிளாக்குகளிலும் ராஜ் தாக்கரேவின் மயான அமைதியைக் கண்டித்து பலரும் கிழித்துள்ளனர்.

ஒரு எஸ்.எம்.எஸ். இப்படிப் போகிறது.. தயவு செய்து இந்த செய்தியை ராஜ் தாக்கரேவின் போன் எண்ணுக்கு பார்வர்ட் செய்யுங்கள். நமக்கு தேவையான போது அவர் எங்கு போய் விட்டார் என்று தெரியவில்லை. தெரிந்தால் அவரை உடனடியாக, தனது கட்சித் தொண்டர்களுடன் போய் மும்பையைக் காப்பாற்றச் சொல்லுங்கள்.

மண்ணின் மைந்தர்களே, ராணுவ என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மராத்தி மக்கள் அல்ல. பிறகு ஏன் அவர்கள் மும்பை மக்களைக் காப்பாற்ற தங்களது உயிரை விட்டுப் போராட வேண்டும் ...? என்று சாட்டையடியாக போகிறது அந்த சூடான எஸ்.எம்.எஸ்.

ராஜ் தாக்கரேவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் கிழி கிழியென்று கிழிக்கும் எஸ்.எம்.எஸ்கள் மும்பை முழுவதையும் மட்டுமல்லாது நாடு முழுவதையும் கடந்த சில நாட்களாகவே வலம் வந்து கொண்டுள்ளன.

வாய் திறந்தார் ராஜ் தாக்கரே:

இப்படி அத்தனை பேராலும் நாறடிக்கப்பட்டு விட்ட நிலையில் வாய் திறந்தார் ராஜ் தாக்கரே.

மும்பை தீவிரவாதத் தாக்குதலை பாஜக அரசியலாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் பாராட்டியுள்ளார்(!).

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அவர் எழுதியுள்ள திறந்த கடிதத்தில், மராத்தி போலீஸாரின் (என்.எஸ்.ஜி. கமாண்டோக்களின் உயிர்த் தியாகம் குறித்து அவர் பேசவே இல்லை) மரணத்தை அரசியலாக்க முயலுகிறார்கள் எல்.கே.அத்வானி மற்றும் நரேந்திர மோடி ஆகியோர்.

இது அவர்களது அசிங்கமான அரசியலையும், சந்தர்ப்பவாதத்தையும் காட்டுகிறது. மக்களின் துயரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அவர்கள் முயலுகிறார்கள்.

அரசியலில் ஈடுபட இது நேரமல்ல. அரசியல் கருத்து வேறுபாடுகளை கைவிட்டு விட்டு செயல்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைதி காத்தது பாராட்டத்தக்கது. அதேபோல இப்போது மற்ற கட்சிகளும் அமைதி காக்க வேண்டும்.

மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் குறித்தும், அதன் தலைவர் ஹேமந்த் கர்கரே குறித்தும் சிவசேனாவின் சாம்னா இதழ் தொடர்ந்து விமர்சித்து வந்தது.

ஆனால் கர்கரே மற்றும் 13 தீரமிக்க மராத்தி போலீஸாரின் தியாகம் இன்று தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பதை நிரூபித்து விட்டது.

இந்த நெருக்கடியான நேரத்தில் இரும்புக் கரம் கொண்டு நீங்கள் ஆட்சி நடத்துங்கள். ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இரக்கம் காட்டாமல் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார் ராஜ் தாக்கரே.

தாமதமாக வாய் திறந்தும் கூட மராத்தி, மராத்தி போலீஸார் என்று குறுகிய வட்டத்துக்குள்ளேயே ராஜ் தாக்கரே இன்னும் இருப்பதைக் காட்டியுள்ளது வேதனைக்குரியதுதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X