For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: அம்பகாமம் கிராமத்தில் ராணுவம் நுழைந்தது?

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டம் ஒலமடு அருகே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கேந்திரமான அம்பகாமம் கிராமத்திற்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக கேந்திரம் அம்பகாமம் ஆகும். முல்லைத்தீவு மாவட்டம், ஒலமடுவின் வடக்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அம்பகாமம்.

இங்கு இன்று காலை ராணுவத்தின் 20வது சிங்கள பிரிவு மற்றும் 16வது கஜபா பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

விடுதலைப் புலிகளின் கடும் சண்டையையும் தாண்டி கிராமத்திற்குள் ராணுவம் நுழைந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக கேந்திரம் அம்பகாமம். முல்லைத்தீவு வனப் பகுதியில் உள்ள தனிமையான கிராமம் இது. இங்குள்ள தென் முனையில் இயற்கையாகவே தடுப்பரண்கள் அமைந்திருப்பதால் விடுதலைப் புலிகள் இங்கு வலுவான நிலையில் இருந்தனர்.

இதன் காரணமாக இந்தப் பகுதியை தங்களது நிர்வாக பயன்பாட்டுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்தனர். முல்லைத் தீவு பகுதியில் நடந்து வரும் சண்டையை இங்கிருந்தபடியே அவர்கள் நிர்வகித்து வந்தனர் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிரான இனக்கொலை அறிக்கை தயார்:

இதற்கிடையே, இலங்கை அதிகாரிகளுக்கான இனப்படுகொலை புகார் குறித்த அறிக்கை தயாராகி விட்டதாக முன்னாள் அமெரிக்க துணை அரசு வக்கீலும், அமெரிக்காவைச் சேர்ந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு என்ற அமைப்பின் சட்ட ஆலோசகருமான ப்ரூஸ் பெயின் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக தயாராகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜனவரி முதல் வாரம் இந்த அறிக்கை அமெரிக்க அரசின் நீதித்துறையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட இனப்படுகொலை குறித்த முழு விவரங்களும் அடங்கியிருப்பதாகவும் பெயின் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் பட்டியலில் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சேவும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கோத்தபாயா அமெரிக்க குடியுரிமை பெற்றவர். பொன்சேகா, அமெரிக்காவின் நிரந்தர வாழுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இவர்கள் செய்த தவறுகளுக்கு அமெரிக்காவும் பதிலளிக்கக் கூடிய கடமையில் உள்ளதால் இலங்கை அதிபருக்குப் பதில் இவர்கள் இருவரையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளதாக பெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நெட் இணையதளத்திற்கு பெயின் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

அமெரிக்க அரசின் இனப்படுகொலை தடுப்புச் சட்டம் 2007ன்படி கோத்தபாயா ராஜபக்சே மற்றும் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர முடியும். அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டிருந்தாலும் கூட இருவரில் ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இன்னொருவர் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்க சட்டங்களுக்கு இவர்கள் கட்டுப்பட்டவர்கள் ஆவர்.

சமீபத்தில் லைபீரியாவில் சித்திரவதை புகாருக்கு ஆளான லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லரின் மகன் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர முடிந்தது. அதே போல கோத்தபாயா மற்றும் பொன்சேகா மீதும் வழக்கு தொடர முடியும்.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு பொன்சேகா மற்றும் கோத்தபாயா ராஜபக்சே ஆகியோர் மீதான இனப்படுகொலை குறித்த அனைத்து விசாரணையையும் விரிவாக மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த புகார் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா நியமிக்கும் புதிய அரசு வக்கீலிடம் இந்த அறிக்கை வழங்கப்படும். அதன் பின்னர் கோத்தாபாயா மற்றும் பொன்சேகா மீதான விசாரணையை நடத்துவது குறித்து அமெரிக்க அரசு முடிவு செய்யும்.

இலங்கையில் நடந்து வரும் தமிழ் இனப்படுகொலை இன்று தமிழ்நாடு, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பு ஆகியவையும் இலங்கையின் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலையை கடுமையாக கண்டித்து வருகின்றன. இவையே, இலங்கை மீது நடவடிக்கை எடுக்க போதுமானவையாகும்.

மேலும், நியூயார்க்கைச் சேர்ந்த இனப்படுகொலை தடுப்பு திட்ட அமைப்பு, சமீபத்தில், இலங்கையை இனப்படுகொலையில் முன்னணியில் உள்ள எட்டு நாடுகளின் வரிசையில் சேர்த்துள்ளது. இதுவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமானதாகும்.

இதை விட முக்கியமாக சமீபத்தில் ஓபாமாவின் புதிய நிர்வாகம் மேற்கொள்ள இனப்படுகொலைக்கு எதிரான புதிய கொள்கையிலும், இலங்கை மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வலுவான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X