For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி தலைமையில் தேர்தல் பணிக்குழு: ஆதரவு கோரி ராமதாசுடன் கருணாநிதி பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தல் தேர்தல் பணிகளை பொறுப்பேற்று நடத்த மு.க.அழகிரி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தேர்தலில் பாமகவின் ஆதரவு கோரி டாக்டர் ராமதாசிடம் பேசியுள்ளதாகவும் முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் அக்கட்சியில் உயர்நிலை செயல் திட்டக்குழு இன்று நடந்தது.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையி்ல்,

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு திமுக வேட்பாளராக லதா அதியமானை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கிறோம்.

தேர்தல் பணிகளை பொறுப்பேற்று நடத்துவதற்கு திமுக, தோழமைக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட தேர்தல் பணிக்குழு மு.க.அழகிரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. லதா அதியமான் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார் என்றார்.

பின்னர் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: மு.க.ஸ்டாலினுக்கு பதவி உயர்வு எப்போது?

பதில்: பொதுக்குழு கூடட்டும்

கேள்வி: நெல்லை மாநாட்டில் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லியிருந்தீர்களே?

பதில்: அதில் தேதி குறிப்பிட்டு இருந்தேனா?

கேள்வி: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் இப்போது அவசியம் தானா, ஏன் இந்த அவசரம் என்று கேட்டிருந்தீர்களே?

பதில்: மாநில அரசை கலந்து கொள்ளாமல், புயல், மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தேர்தலை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்காமல், கருத்து சொல்லக்கூட வாய்ப்பு தரவில்லையே என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.

கேள்வி: இடைத்தேர்தலை சந்திப்பதற்கு தயக்கமா?

பதில்: (சிரிப்பு)

கேள்வி: திருமங்கலம் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றனவே?

பதில்: பத்திரிகைகள் அவர் அவர் நோக்கப்படி கருத்துக்களை எழுதலாம், வெளியிடலாம். இதை ஒரு முன்னோட்டமாக கருதி தான் திமுக தோழமைக் கட்சிகளின் செயல் வீரர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை வெளியேறிய நிலையில் உங்களின் பலம் குறைந்து இருக்கிறதே. வெற்றி கிடைக்குமா?

பதில்: ரிசல்ட்டுக்கு பிறகு தெரியும்.

கேள்வி: இந்தத் தேர்தலில் பாமகவின் ஆதரவை கேட்டிருக்கிறீர்களா?

பதில்: ஆமாம். டாக்டர் ராமதாசிடம் பேசியிருக்கிறேன்.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே. மீண்டும் மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்துவீர்களா?

பதில்: இன்றிரவு அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து வலியுறுத்த இருக்கிறார்.

கேள்வி: திட்டமிட்டப்படி பொங்கலன்று அரசு கேபிள் தொடங்கப்படுமா?

பதில்: இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதற்குள் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டால் திட்டமிட்டப்படி அரசு கேபிள் தொடங்கப்படும்.

கேள்வி: மதிமுக தொகுதியை (திருமங்கலம்) அதிமுக பறித்துக் கொண்டதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதேபோல பெருந்துறை தொகுதியை திமுக பறித்துக் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருக்கிறதே?

பதில்: வரலாறு தெரியாமல் வரதராஜன் கூறியிருக்கிறார். இடைத்தேர்தல் மட்டுமல்ல, பொதுத் தேர்தலிலும் திமுக பெருந்தன்மையுடன் நடந்துக் கொண்டுள்ளது என்பது தான் வரலாறு. ஆனால், அந்த வரலாற்றையே மாற்ற முயற்சித்திருக்கிறார்கள்.

பெருந்துறை தொகுதியில் சோஷலிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து திமுக வெற்றி பெற செய்தது. சில மாதங்களில் அவர் இறந்த பிறகு அதே கட்சி வேட்பாளரை திமுக ஆதரித்தது.

திருமங்கலம் தொகுதியில் நடைபெற்றது போல நாங்கள் பறிக்கவில்லை. கூட்டணி மாறிய பிறகு தான் பெருந்துறை தொகுதியில் திமுக போட்டியிட்டது. இது தான் நடந்த வரலாறு என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X