For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்யம்: ஊழியர்களின் கொடிய நிலை-சம்பளம் கொடுக்க பணமில்லை!

By Sridhar L
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் 53,000 ஊழியர்களுக்கு இந்த மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அடுத்த சம்பளத்துக்குப் பணமில்லை.

இதைத் தொடர்ந்து ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்கள் விண்ணப்பங்களை வேறு நிறுவனங்களுக்குத் தர ஆரம்பித்துள்ளனர்.

ரூ.8,000 கோடி முறைகேட்டை ஒப்புக் கொண்டு, சத்யம் தலைவர் ராமலிங்கராஜு ராஜினாமா செய்த பிறகு எழுந்துள்ள நிலை இந்திய தொழில்துறையும், வர்த்தகத் துறையும் எதிர்பார்க்காத ஒன்று.

ஒட்டுமொத்தமாக இந்திய நிறுவன்களின் மீதான நம்பிக்கையையே சிதைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது சத்யம் நிறுவனத்தின் முறைகேடுகள்.

இப்போது சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள், நெஸ்லே, ஜெனரல் மோட்டார்ஸ், சிங்கப்பூர் அரசு உள்பட பல நிறுவனங்களும் சத்யம் சர்வீஸ் வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இருக்கிற வாடிக்கையாளர்களையாவது தக்க வைக்கும் நோக்கில், நேற்று சத்யம் தற்காலிக நிர்வாகி ராம் மைனாம்பதி 100 வாடிக்கை நிறுவனங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதரவு தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த நிறுவனங்கள் தரப்பில் என்ன மறுமொழி கூறப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனாலும், நிலைமையைச் சமாளித்துவிடலாம். ஊழியர்கள் நம்பிக்கையோடு இருங்கள், தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என நேற்று மாலை நடந்த பிரஸ்மீட்டில் கேட்டுக் கொண்டார்.

சம்பளம் தர பணமில்லை:

சத்யம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 53,000 பேர். இவர்களுக்கு சம்பளம் தர மட்டும் மாதம் ரூ.550 கோடி தேவை. இதைத் தவிர ஊழியர் நல நிதியாக மாதம் ரூ.10 கோடி தர வேண்டுமாம்.

ஆனால் கையிருப்பில் இருப்பதோ, ராஜு விட்டுவைத்துள்ள ரூ. 340 கோடிதான். சம்பளம் போக நிர்வாகச் செலவுகளுக்கு இதைவிட இருமடங்கு பணம் தேவை என்கிறார்கள். எனவே இப்போதைய சூழலில் அடுத்த மாத சம்பளத்தையே கொடுக்க வழியில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறது சத்யம்.

10,000 பேர் நீக்கம்:

இதற்கிடையே, இன்றைய சூழலின் அவசியம் கருதி 10,000 பேரை சத்யம் நீக்க முடிவு செய்திருப்பதாக பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பளச் சுமையைக் குறைக்கவும், நிர்வாகத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடிவடிக்கை அவசியம். எனவே அடுத்த 48 மணி நேரத்துக்கு நிறுவனத்தின் எந்த நடவடிக்கை குறித்தும் கேள்வி கேட்காதீர்கள் என சீனியர் நிர்வாகிகளுக்கு ராம் மைனாம்பதி கட்டளையிட்டுள்ளதாக சத்யம் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் 10,000 பேர் நீக்கம் குறித்து வரும் செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. சத்யம் வெளிப்படாயாக எதையும் அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள். வேலை நீக்கம் என்பது அடுத்த மாதம்தான் இருக்கும் என சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

20,000 ஊழியர் விண்ணப்பம:

சத்யம் நிறுவனத்தில் இனி எதிர்காலமில்லை என முடிவு செய்துவிட்ட பெரும்பாலான ஊழியர்கள் கடந்த இரு தினங்களாக தங்கள் விண்ணப்பங்களை வேலை வாய்ப்பு இணைய தளங்களில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஒருநாள் மட்டுமே சத்யம் நிறுவனத்தின் 7,800 ஊழியர்கள் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக, ஐடி-பிபிஓ ஊழியர் யூனியன் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரப்பூர்வ வேலை நீக்கம் என்ற நடவடிக்கையை சத்யம் கையிலெடுத்தால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போகிறோம் என கார்த்திக் தெரிவித்தார்.

கூட்டத்தில் ராஜூ பங்கேற்க அனுமதியில்லை:

சத்யம் நிறுவன முதலீட்டாளர்களைக் காக்கவும், நிர்வாக முறைகேடுகளைக் களையவும் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நாளை நடக்கவுள்ள சத்யம் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ராமலிங்க ராஜூவை பங்கேற்க அரசு அனுமதிக்காது. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ராஜூவை அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே நாளைய கூட்டத்துக்கு அரசு தரப்பு பார்வையாளர்கள் கலந்து கொள்வது நிச்சயம் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X