For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி செய்த தவறு-மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்த ஒபாமா

By Sridhar L
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது 'faithfully' என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாண வார்த்தைகளைச் சொல்ல சொல்ல அதை ஒபாமா திருப்பிச் சொன்னார்.

ஆனால் பாதியிலேயே வார்த்தையை தவற விட்டார் அவர். அதற்குக் காரணம் நீதிபதி வேகமாகவும், இரு வார்த்தைகளை தவறான இடத்தில் போட்டதாலும்தான்.

இதனால் ஒபாமா குழப்பமாகி உச்சரிப்பை நிறுத்தி பின்னர் தானாகவே மனதில் கொண்டு வந்து அதைச் சொன்னார்.

நீதிபதியின் இந்தத் தவறு அமெரிக்க மீடியாக்களில் பலமான செய்தியாகி விட்டது. நீதிபதி ராபர்ட்ஸ் செய்த தவறால் ஒபாமாவுக்கு கெட்ட பெயராகி விட்டது என்று வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார்.

பாக்ஸ் நியூஸ் டிவியிலோ, ஒபாமா அதிபரா என்பது சந்தேகமாக இருக்கிறது. யாரேனும் கோர்ட்டுக்குப் போய் விடப் போகிறார்கள் என்று விமர்சித்திருந்தனர்.

தனது தவறை நீதிபதி ராபர்ட்ஸும், ஒபாமாவிடம் ஒத்துக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் நடந்த மதிய விருந்தின்போது ஒபாமாவிடம், நான் செய்ததுதான் தவறு என்று கூறினாராம் ராபர்ட்ஸ்.

சிக்கண நடவடிக்கையில் ஒபாமா:

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்போரின் சம்பளத்தை இனி உயர்த்த வேண்டாம் என அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அதேபோல புதிய நடத்தை விதிமுறைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஒபாமா பல்வேறு அதிரடி நடவடிக்கைளில் இறங்கியுள்ளார்.

முதலில் வெள்ளை மாளிகையிலிருந்து அவர் அதிரடி மாற்றங்களை தொடங்கியுள்ளார். வெள்ளை மாளிகையில் பணியாற்றி வரும் கிட்டத்தட்ட 100 ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த அவர் தடை போட்டுள்ளார்.

இவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் டாலர் பணம் சம்பளமாக செலவிடப்படுகிறது. நாடே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் நிலையில் வாஷிங்டனிலும் சிக்கண நடவடிக்கை அவசியமாகியுள்ளது என்று இதற்குக் காரணம் கூறியுள்ளார் ஒபாமா.

வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பத்திரிக்கைத் தொடர்பு செயலாளர் உள்ளிட்டோர் இந்த சம்பள உயர்வு நிறுத்திவைப்பால் பாதிக்கப்படுவர்.

இவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளமே இனி தொடரும். புதிதாக ஊதிய உயர்வு இருக்காதாம்.

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு வருடா வருடம் தானாகவே ஊதிய உயர்வு கிடைக்காது. அவர்களுக்கான ஊதியத்தை அதிபர்தான் தீர்மானிப்பார் என்பது குறிப்பிடத்தகக்து.

இந்த நிலையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார் ஒபாமா.

லாபி செய்வது கூடாது...

அதேபோல பல்வேறு புதிய நடத்தை விதிமுறைகளையும் ஒபாமா அறிவித்துள்ளார்.

இவற்றில் முக்கியமானது, காரியம் சாதிப்பதற்காக வெள்ளை மாளிகையில் யாரும் இனிமேல் லாபி உருவாக்கக் கூடாது என்பதுதான். அதேபோல அதிபரின் முடிவுகளை மக்களும் ஆய்வு செய்யும் வாய்ப்பையும் ஒபாமா அளித்துள்ளார்.

ஒளிவுமறைவில்லாத நிர்வாகத்தைத் தரும் நோக்கில் இந்த மாற்றங்களை அறிவித்துள்ளார் ஒபாமா.

வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் ஒபாமா கொண்டு வந்துள்ள மாற்றங்களின் சாராம்சம் ..

- அதிபர் அல்லது முன்னாள் அதிபர் ஒருவர் எடுத்த முடிவை அறிய விரும்பும் அமெரிக்க குடிமகனுக்கு, அதுதொடர்பான விவரத்தை வெள்ள மாளிகை நிர்வாகம் தர வேண்டும். இதற்காக அதிபரின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அனுமதிக்காக காத்திருக்கலாம்.

இந்த உத்தரவுக்கு முக்கிய பின்னணி உள்ளது. கடந்த புஷ் ஆட்சியில், தீவிரவாதிகள் என சந்தேகப்படப்பட்ட சிலரிடம் சிஐஏ விசாரணை நடத்தியது. இதுகுறித்து மனித உரிமை அமைப்புகளும், சிவில் உரிமை கழகங்களும், அரசிடம் தகவல் கேட்டிருந்தன. ஆனால் இதுவரை அவை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒபாமாவின் புதிய உத்தரவு மனித உரிமை ஆர்வலர்களுக்கு நிம்மதியை அளிக்கும் எனத் தெரிகிறது.

- அதேபோல முன்னாள் அதிபர்கள் தொடர்பான கோப்புகளைப் பார்வையிடுவதிலும் புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளார்.

மேலும், அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிய பொதுமக்களுக்கு மேலும் சுதந்திரம் அளிக்கும் வகையில் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் ஒபாமா. இதுவும் புஷ் எடுத்த நடவடிக்கைகளுக்கு முரணானது.

அரசு எப்படி முடிவுகளை எடுக்கிறது என்பதை மீடியாக்கள், பொது நலன் அமைப்பினர் இனி அறிய முடியும்.

இதை விட முக்கியமாக லாபி ஏற்படுத்த முயல்வோருக்கு ஒபாமா பெரும் அடி கொடுத்துள்ளார். அரசு வேலையை முடிப்பதற்காக ஆட்களை திரட்டுவது, பரிந்துரைகளை நாடுவது போன்றவை இனி கூடவே கூடாது என உத்தரவிட்டுள்ளாராம் ஒபாமா.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன்.

ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 - 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X