For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பட்டத்தை வாங்க மறுத்த மாணவர்

By Sridhar L
Google Oneindia Tamil News

நெல்லை: இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெறும் வரை பட்டம் வாங்க மாட்டேன் என்று கூறி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் பட்டத்தை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. துணை வேந்தார் சபாபதி மோகன் பட்டங்களை வழங்கினார்.

அப்போது பிஏ ஆங்கில இலக்கியம் படித்த மாணவர் ஜான்பால் பூபதி என்பவர் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்குரிய பட்டத்தை வாங்க மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர் ஜான்பால் பூபதி கூறுகையில், எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் ராயபாண்டியபுரம். நான் இந்த கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். தற்போது வேறு கல்லூரியில் எம்ஏ படித்து வருகிறேன்.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகாக நான் பட்டத்தை வாங்க மறுத்து விட்டேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் எந்த தீர்வும் காணப்படவில்லை. அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவி்ல்லை.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை நான் எனது பட்டத்தை வாங்க மாட்டேன் என்றார் ஜான்பால் பூபதி.

இந்த விழாவில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பட்டங்களை எரிக்கப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.

வக்கீல்கள் இன்று ரயில் மறியல்

இதற்கிடையே, இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதை நிறுத்த கோரி நெல்லை வக்கீல் சங்கத்தினர் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து வக்கீல் சங்க செயலாளர் சிவகுமார் கூறுகையில், ஈழத்தில் தமிழினம் அழிவில் விழிம்பில் நிற்கிறது. தமிழர்களை பூண்டோடு அழிப்பதை குறிக்கோளாக கொண்டு இலங்கை ராணுவம் செயல்படுகிறது. இந்திய ராணுவமும் அதற்கு துணை போவது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது.

ஈழப்பிரச்சனையில் மத்திய அரசு இலங்கைக்கு படைகள், கருவிகள் அளிப்பதை நிறுத்தி அங்குள்ள தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு ஆயிரம் வக்கீல்கள் நெல்லை நீதிமன்றம் முன்பிருநது ஊர்வலமாக புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

உயிர், உடமை இழந்து அவலத்தின் இறுதி கட்டத்தில் நிற்கும் உலகில் சபிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை காப்பாற்ற கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்பட அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

முத்துக்குமார் ஊரில் கடையடைப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும், ஈழத்தமிழர்களை காப்பாற்ற கோரியும் சென்னையில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துகுமாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவரது சொந்த ஊரான ஆத்தூர், தெற்கு ஆத்தூர், பஜாரில் நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் 5 மணிக்கு மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் இனியன் தலைமையில் மக்கள் உரி்மை கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அரிமா, மாநில மீணவரணி செயலாளர் நியூட்டன், ஆகியோர் முன்னிலையில் 120 விடுதலை சிறுத்தைகல் கட்சியினர் மவுன ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலம் காலை ஆத்தூர் பஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்டு முத்துகுமார் வீட்டில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அகதிகள் முகாமில் கறுப்புக் கொடி ஏற்றம்

இதற்கிடையே, முத்துக்குமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அகதிகள் முகாமில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் யாழ்பாணம், கவுனி, கண்டி பகுதிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இறந்த முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பாரபட்சம் காட்டும் இலங்கை அரசை கண்டித்தும் அங்கு நேற்றிரவு முதல் வீடுகள் தோறும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகாமில் உள்ளவர்களிடம் கேட்டபோது பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கண்டு கொள்ளாத இலங்கை அரசை முத்துகுமாரின் மரணம் திசை திருப்பியுள்ளதாகவும், இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துகுமாரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் விதமாக கறுப்பு கொடி ஏற்றியுளளோம் என்றனர்.

இந்திய அரசு விரைந்து தலையிட்டு இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X