For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளை மாளிகை முன் நாளை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசை வலியுறுத்தி, அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் நாளை வெள்ளை மாளிகை முன்பும், அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. உண்ணாவிரதத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இலங்கை விவகாரத்தில் தலையிட்டு, இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களை திட்டமிட்டு தாக்கி அழித்து வருகின்றனர். சர்வதேச நிவாரண உதவிக் குழுக்களை முன்கூட்டியே இலங்கை அரசு வெளியேற்றி விட்டது.

தொடர்ந்து தமிழர்களை பீரங்கிகளாலும், குண்டு வீச்சாலும், வான் தாக்குலதாலும் அழித்து வருகின்றது இலங்கை அரசு. வன்னிப் பகுதி முழுவதும் மரண ஓலமாக உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்து வருகின்றனர்.

எனவே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும், இலங்கை விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இப்போராட்டம் குறித்து போராட்டக் குழு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
மரியாதைக்குரிய பராக் ஒபாமா அவர்கள், அமெரிக்காவின் அரச தலைவராக மட்டுமன்றி, இந்த உலகத்தின் தலைவராகவும் ஆகி - நீதி மறுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கை ஒளியாக இன்று விளங்குகின்றார். அதனாலேயே எமக்கான நீதி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டு நாங்களும் அவரிடம் போகின்றோம்

அதுமட்டுமல்லாது -

அமெரிக்காவின் முந்தைய நிர்வாகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கொள்கை தான், அரசியல் அபிலாசைகளுக்கான நியாயமான எங்கள் விடுதலைப் போரை, பயங்கரவாதம் எனத் தவறாகக் கொச்சைப்படுத்தி தமிழர்களை இன்றும் சீரழிக்கின்றது.

பழைய அமெரிக்க நிர்வாகத்தின் அந்த கொள்கையை அடிப்படையாக வைத்துப் போரை நடத்தித்தான், சிறிலங்கா இன்றும் எம் மக்களைக் கொன்று குவிக்கின்றது.

அந்த வகையில் தமிழர்கள் மீது பூசப்பட்டுள்ள இந்த பயங்கரவாத சாயத்தை அகற்றி - எமக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டிய ஒரு தார்மீகக் கடமையும் அதிபர் ஒபாமா அவர்களுக்கு உண்டு. அதனாலேயும் தான் நாம் அவரிடம் செல்கின்றோம்.

வட-அமெரிக்காவில் வாழ்கின்ற எங்களால், வன்னி மக்களுக்காக இன்று செய்யக் கூடியது இது தான். அதனால், வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரும் - அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சரி, கனடாவில் வாழ்ந்தாலும் சரி - உரிமையோடு வற்புறுத்தி, அன்போடு கட்டாயப்படுத்தி, இந்தப் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுககிறேன்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் - எல்லா மாநிலங்களிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பேரணிக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனவும், அதனால், பயண உதவி தேவையான தமிழர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள செயற்பாட்டாளர்களை நேரடியாகவோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பேரணி ஏற்பாட்டின் மையச் செயலகத்தையோ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேவேளையில், இந்த பேரணி நடைபெறும் அதே நேரத்தில் - அதே இடத்தில் - சிறிலங்கா அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பேரணியும் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த பேரணியையும் மீறி எமது குரல் அரச தலைவர் ஒபாமாவுக்கும், அமெரிக்க அரசுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகவே, பல்லாயிரக்கணக்கில் அங்கு அணி திரளுமாறு தமிழர்களிடம் நாம் வேண்டுகின்றோம்.

இந்த நாடு அழகானது யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எந்தக் கருத்தையும் வெளியிடும் சுதந்திரத்தை இது எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றது. சிறிலங்காவின் பேரணியில் பங்கேற்போருக்கு இருக்கும் இந்த உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

தமிழர்களாகிய நாம் மிகவும் பண்பான ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உலகின் மரியாதைக்கும் உரியவர்கள். எங்களது இந்தப் பெருமைகளை நாம் காக்க வேண்டும். அதனால், பேரணியில் பங்கேற்கும் தமிழர்கள் - எந்த வகையான ஆத்திரமூட்டல் செயல்களுக்கும் உள்ளாகாமல் - பொறுமையுடனும் நிதானத்துடனும் எங்கள் கோரிக்கைகளை வலிமையுடன் முன் வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

அப்போது தான் நாம் சொல்கின்ற செய்தி உரியவர்களுக்கு சரியாகப் போய்ச் சேரும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X