For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ்காரர் தீக்குளிப்பு-முன்னாள் எஸ்ஐ தீக்குளிக்க முயற்சி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆயுதப்படை காவலர் ரவிக்குமார் என்பவர் நேற்று திடீரென தீக்குளித்தார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் ரவிக்குமார். ஆயுதப்படையில் இவர் காவலராக உள்ளார்.

கலவர தினத்தன்று இவர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே பணியில் இருந்தார். அப்போது வக்கீல்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிளேடுகளால் அவரது உடலில் கீறியதில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரவிக்குமார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து வக்கீல்களுக்கு எதிராக கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலை, திடீரென உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தின் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரவிக்குமாரை மீட்டுக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில்,

வக்கீல்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் போலீசாரிடம் ஒற்றுமை இல்லை. போலீசாரும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், தொடர்ந்து எல்லா சம்பவங்களிலும் போலீஸ்காரர்கள் தான் தாக்கப்படுகிறார்கள். போலீஸ்காரர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இப்போது ஐகோர்ட்டு சம்பவத்தில் 5 உயர் போலீஸ் அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் கல்வீசி தாக்கிய வக்கீல்கள் மீதும், போலீஸ் நிலையத்தை எரித்த வக்கீல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

வக்கீல்கள் கல்வீசி தாக்கியதையும், போலீஸ் நிலையத்தை எரித்ததையும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டன. ஆனால், போலீஸ் அதிகாரிகளை மட்டும் மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

போலீசாருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? என்று தெரியவில்லை. இதனால் மன ரீதியாக நான் வருத்தம் அடைந்தேன். எனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக தீக்குளித்து உயிரைவிட முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் ரவிக்குமார்.

ரவிக்குமாருக்கு தொடை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ்காரர் தீக்குளித்த சம்பவம் சென்னை காவல்துறையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எஸ்.ஐ. தீக்குளிக்க முயற்சி:

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் நிலையம் முன்பு, வக்கீல்களைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரை போலீஸார் தடுத்துக் கைது செய்தனர்.

பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குப்புசாமி (61).

இவர், பொன்னேரி பஜார் வீதியில் மனைவி ஞானதீபம், மகன்கள் ஓம்குமார், லோகேஸ்வரன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை பொன்னேரி காவல் நிலையம் முன்பு வந்த குப்புசாமி, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த டிஎஸ்பி ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் ஓடி வந்து, கேனை பிடுங்கி அவரை காப்பாற்றினர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரை தாக்கிய வக்கீல்களுக்கு எதிராக தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் எமர்ஜென்சி-கிருஷ்ணய்யர் கோரிக்கை:

இதற்கிடையே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வி.கிருஷ்ணய்யர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை டிஜிபி மற்றும் கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நீதி நிலைநாட்டப்படும் வரையில் அனைத்து நீதிபதிகளும் ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்த வேண்டும். மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகளி்ன் கையில் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் போலீசாரின் அராஜகத்தால் நாம் பெற்ற சுதந்திரம் நிர்மூலமாகிவிடும்.

நீதியின் உயரிய அமைப்பு இன்று வெறியாட்டத்துக்கு இறையாகியுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழங்கு மீறப்பட்டிருப்பதன் மூலம் தேசிய இறையாண்மை நசுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X