For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!

By Sridhar L
Google Oneindia Tamil News

Vaiko with Black Flag
தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.

கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.

108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையம் ரூ.4,900 கோடி செலவில் அமைகிறது. தலா 500 மெகாவாட் திறன் உடைய 2 பிரிவுகள் கொண்ட அனல் மின் நிலையமாக இது நிறுவப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் மத்திய நிலக்கரிதுறை அமைச்சர் சந்தோஷ் பக்ரூடியா, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, மணிசங்கர் அய்யர், ஆ.ராசா, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கேவாசன், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், ஆர்.வேலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், எஸ்.ரகுபதி, கே.வேங்கடபதி, ராதிகா செல்வி, நாராயணசாமி, தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகவும், அதில் பிரணாப் முகர்ஜியின் பங்கு அதிகம் என்றும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் குறைகூறி வருகின்றன.

இதற்கிடையே தூத்துக்குடிக்கு வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புகொடி காட்டப்போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.

இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதை வலியுறுத்தாமலும், தமிழர்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசிவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். அவருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்றும் தமிழ் இன உணர்வாளர்களும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்ட வைகோ இன்று தூத்துக்குடி வந்தார்.

வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி, செருப்பு மற்றும் துடைங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர்.

இதையடுத்து வைகோ, விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தீக்குளிப்பு- கண்ணீர் விட்ட வைகோ:

முன்னதாக இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த தேமுதிக தொம்டர் சீனிவாசனை மருத்துவமனையி்ல் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்ணீ்ர் விட்டு அழுதார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேமுதிக தொண்டரான சீனிவாசன் (36) நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்தார்.

பலத்த தீக்காயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றிரவு சீனிவாசனை சந்திக்க வந்தார். எரிந்துபோன நிலையில் குற்றுயிராகக் கிடக்கும் அவரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத வைகோ சீனிவாசனின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம், சீனிவாசனின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ,

வள்ளிப்பட்டு சீனிவாசன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்துள்ளார். அவர் தேமுதிகவில் முழு ஈடுபாட்டுடன் பாடுபட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனின் மனைவி கண்ணீர் விட்டு கதறுகிறார். தேமுதிக கட்சி தலைவருக்காக எந்த கட்சி கூட்டம் நடந்தாலும், அவரது எந்த படமாக இருந்தாலும் சென்று பார்ப்பார் என்று கூறுகிறார்.

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்க போகிறேன் என்று கூறியபோது வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைத்தேன். எனது கணவரின் உடல் முழுவதும் வெந்து போய் இருப்பதால் எனது ஒரே மகன் அவரை பார்க்க வரவே அச்சப்படுகிறான். அவர் பிழைக்கவில்லை என்றால் நானும், எனது மகனும் உயிரோடு இருக்க மாட்டோம் என்று கூறுகின்றார்.

இதற்கு நான் என்ன பதில் சொல்ல (கண் கலங்குகிறார்). இந்த சம்பவம் நெஞ்சை பிளக்கிறது. லட்சக்கணக்காக மக்களை கொல்லும் திட்டம் இலங்கையில் நடக்கிறது.

இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் கொடுத்து விட்டு, அவர்களுக்கு மருந்து வழங்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நிதி திரட்ட போவதாக சொல்கிறார்கள். அந்த நிதி யாருக்கு கொடுப்பதற்கு? சிங்கள ராணுவத்திற்கா?

துளி மருந்து வாங்கவும் நிதி வழங்க கூடாது. அது முறையாக இலங்கை தமிழர்களுக்கு போய் சேராது.

இதுவரை அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்டவில்லை. லண்டனில் கூட இலங்கை பிரச்சினை குறித்து 3 நாட்கள் விவாதம் நடந்தது. இங்கு நாம் 7 கோடி பேர் இருந்தும் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.

இலங்கையில் போரை நிறுத்தகோரி, இந்த நிமிடம் வரை இந்திய அரசு சார்பில் சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ, பிரணாப் முகர்ஜியோ இலங்கை அரசை வலியுறுத்தவில்லை.

வினையை விதைத்திருக்கிறார்கள், வினையை அறுப்பார்கள்.

வக்கீல்களை, போலீசார் தாக்கியது திட்டமிட்ட தாக்குதல். போலீஸ் அதிகாரிகள் அரசு சொன்னதை கேட்டுக்கொண்டு செய்தனர். வக்கீல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்.

தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X