For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடல் எல்லாம் மூளை, சிந்தனை, வஞ்சனை: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியி்டுள்ள அறிக்கை:

2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சோனியாகாந்தியை அழைத்து, இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று வரவேற்பு கூறி வாழ்த்தி- அந்த தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து- பிரதமராக அவர்தான் வரவேண்டுமென்றும், வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியாகாந்தி தியாகத் திருவிளக்காக உயர்ந்து,

தான் பிரதமர் பதவிக்கு வரவிரும்பவில்லை என்றும், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பேற்பார் என்றும் கூறி- கடந்த ஐந்தாண்டு காலமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவியாக செயல்பட்டு- சாதனை செல்வியாக நிகழ்ந்து, சாதனைக்கு மேல் சாதனை என்று சாதித்து வருகிறார்.

அத்தகைய ஆட்சிக்கும், தலைவிக்கும் தக்கதோர் துணையாக- தோழமை கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணமாக- ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சான்றாக தி.மு.க- காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே செயல்பட்டு வருகின்றன. மத்தியிலே உள்ள அரசுக்கு தி.மு.க. எந்த அளவிற்கு தோழமையாக செயல்பட்டு வருகிறதோ, அது போலவே மாநிலத்தில் நடைபெறும் தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் கட்சியும் ஒத்துழைப்பு நல்கிவருகிறது.

பத்திரிகைகளுக்குப் பிடிக்கவில்லை...

இந்த ஒற்றுமையும், செயல்படும் தன்மையும் ஒரு சிலருக்கு தொடக்கம் முதலே பிடிக்கவில்லை. குறிப்பாக, ஒரு சில பத்திரிகைகளுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் இந்த கூட்டணி செழித்தோங்கி வளர்ந்து வருகிறது.

இந்த கூட்டணியை குலைக்கவும்- காங்கிரஸ் கட்சியை தங்கள் அணிக்கு இழுக்கவும் மறைமுகமாக முயற்சித்து பார்த்து, நடக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடியாகவே வரவேண்டும் எங்கள் அணிக்கு- நான் இதுவரை உத்தரவாதம் அளித்திருந்த இடதுசாரி கட்சிகளையெல்லாம் வஞ்சித்துவிட்டு வரவேற்க தயார்- வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து பார்த்தார்கள்.

1998-99-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க கூட்டணியோடு மத்தியிலே ஆட்சி நடத்திய வாஜ்பாய் பட்ட பாட்டினையெல்லாம் நன்கு உணர்ந்தவர்கள் யாராவது அங்கே திரும்பிப் பார்ப்பார்களா? அருமை நண்பர் வீரப்ப மொய்லி, அடுத்த நாளே கொடுத்த பேட்டியில், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று பதில் அளித்து விட்டார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்த கூட்டணியில் எந்த விதமான தொய்வும் ஏற்படவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினையிலே கூட இரு தரப்பினருக்கும் இடையே அதன் காரணமாக ஏதாவது ஏற்படாதா? அதிலே குளிர்காய முடியாதா? என்று நினைத்தார்கள். அந்த பிரச்சினையிலும், மத்திய வெளி உறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக இலங்கையிலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வெளியிட்ட சில அறிவிப்புகளுக்கு பிறகு இலங்கை தமிழர் பிரச்சினையை சொல்லியும் கூட்டணிக்குள் குழப்பம் விளைத்திட முடியாமல் தோற்றார்கள்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு பிரச்சினையிலும் இரண்டு கட்சிகளும் கொண்டுள்ள கருத்துகள் ஒன்றுகொன்று முரண்பாடானதல்ல. இருவருக்குள் குறிக்கோள் ஒன்றுதான். அதனை வெளிப்படுத்துகின்ற முறைகளிலே வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். இலங்கையிலே உள்ள தமிழர்கள் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற குறிக்கோளில் ஒரு குன்றிமணி அளவுக்கு கூட என்றைக்கும் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே வேறுபாடோ, மாறுபாடோ இருந்ததில்லை.

கடந்த காலத்தில் வேண்டுமானால், தி.மு.க. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எடுத்த நடவடிக்கைகளை வேண்டுமென்றே திட்டமிட்டு- தமிழகத்திலே உள்ள தி.மு.க.வை பற்றி மத்தியில் இருந்த இந்திராகாந்தி அரசுக்கும், மற்ற அரசுகளுக்கும் திரித்து சொல்லி- கடுகை மலையாக்கி- மலையை சுனாமி அலையாக்கி- அதன் காரணமாக தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முனைந்தார்கள்.

இருந்த போதிலும் அதன் பின்னர் உண்மையை உணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசும்போது- ஆதரித்த போதும், எதிர்த்த போதும் இரண்டு நிலையிலும் கொள்கை உறுதியோடு இருப்பவர் கலைஞர் என்று புகழ் மாலை சூட்டினார்.

தற்போது குலாம் நபி ஆசாத் நேற்றைய தினம் என்னைச் சந்தித்து - என் உடல் நலம் விசாரித்ததோடு- நாட்டு நலம் எந்த வகையிலும் தொய்வடையாமல் இருப்பதற்காக- நம்முடைய கடந்த கால வெற்றி கூட்டணியே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். ஜனநாயகத்திலும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அக்கறை கொண்ட இன்றைய மத்திய, மாநில அரசுகளை வாழ்த்தி வரவேற்கின்ற - புகழ்ந்துரைக்கின்ற இந்திய நாட்டு மக்களின் எண்ணத்தை உணர்ந்து கொண்டு - அதை எப்படியும் உடைத்தாக வேண்டுமென்று கருதிக் கொண்டு கோள்மூட்டி எதையாவது செய்ய வேண்டும், அது இம்மியளவு ஆனாலும் அது மதவாத கட்சிகளுக்கு ஆதரவாக அமைய வேண்டும் என்று கருதுகிறவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர்களில் ஓரிருவரை எல்லோரும் அறிந்திடுவர். அந்த சிலருக்கு உடல் எல்லாம் மூளை- மூளை எல்லாம் சிந்தனை- சிந்தனை எல்லாம் வஞ்சனை.

இதற்கு எடுத்துக்காட்டு கூற வேண்டுமேயானால்- குலாம் நபி ஆசாத் நேற்றைய தினம் என்னைச் சந்தித்து விட்டு- காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தொடரும் என்று நிருபர்களிடையே சொன்னபிறகும்- மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கின்ற மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டுமென்று கடும் முயற்சி செய்து, தினமணி'' மூலம் முதல் பக்கத்திலேயே ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

குலாம் நபி ஆசாத் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை, குறிப்பாகவும், சிறப்பாகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களையெல்லாம் சந்தித்த பிறகுதான் தி.மு.க. காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றி கூட்டணி தொடரும் என்பதை அறிவித்தார்- அது கேட்டு வாழ்த்தி மகிழ்ந்தவர்கள் திடுக்கிடும் வண்ணம் வெளியிட்டுள்ள செய்தி என்ன தெரியுமா? இதோ அது

அ.தி.மு.க.வுடன் கூட்டணி: தி.மு.க.வை விட அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதே காங்கிரஸ் கட்சிக்கு இயல்பான கூட்டணியாகவும், வெற்றிக் கூட்டணியாகவும் அமையும்.

எனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவது பற்றி கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என சில மாவட்ட தலைவர்களும், ஒரு சில மாநில நிர்வாகிகளும் குலாம் நபி ஆசாத்திடம் வற்புறுத்தினர் என கூறப்படுகிறது.

எந்த காங்கிரஸ் நண்பர்கள், எந்த மாவட்ட தலைவர்கள், எந்த மாநில நிர்வாகிகள் இப்படி வலியுறுத்தினார்கள் என்று நமக்கு தெரியவில்லை. தி.மு.க. கூட்டணி பிடிக்கவில்லை என்று யாரோ சிலர் வற்புறுத்தினர் என்று கூறப்படுகிறது என்று அந்த ஏடு அக்கறையோடு எழுதிக் காட்டுகின்றது.

மத்திய அரசு மீது வீசப்படும் எதிர்க்கட்சிகளின் கணைகளை - அம்புகளை தாங்கிக் கொண்டு சோனியாகாந்தியின் வழிகாட்டுதலோடு நடைபெறுகின்ற மத்திய ஆட்சியும், மாநில தி.மு.க. ஆட்சியும் நிலைத்திட, நீடித்திட கடந்த ஐந்தாண்டு காலமாக- மாற்றார் மனம் போன போக்கில் பேசியதையெல்லாம் அலட்சியம் செய்து - மத சார்பற்ற மத்திய அரசு - மனிதநேயம் மிக்க மத்திய அரசு - வலுப்பெற்று, வளம் பெற்றுத் திகழ - ஒல்லும் வகையெல்லாம் ஒத்துழைத்து வரும் மாநில தி.மு.க.வுடன் அணி சேர வேண்டாம் என்றும், அதற்கு மாறாக அ.தி.மு.க.வுடன் சேர்ந்தால்தான் அமோக வெற்றி பெறலாம் என்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள், குலாம் நபி ஆசாத் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்திலேயே சொன்னார்கள் என்று செய்தி வெளியிடுகிறது.

அந்த செய்தியை நம்புவதற்கு ஒருவேளை அப்படி ஒரு சில காங்கிரஸ் நண்பர்கள் கிசு கிசுத்திருப்பார்களேயானால்- அவர்கள் கடந்த கால நிகழ்வுகளை, இந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்தவைகளை அவ்வளவு விரைவாகவா மறந்திருக்க முடியும்?

யார் இந்த சோனியாகாந்தி? வெளிநாட்டுக்காரிக்கு இந்தியாவிலே அரசியல் தலைமையா?'' என்று கேட்டவர் யார்? ஜெயலலிதா அல்லவா? அதைவிட, அந்த சொக்கத்தங்கம் சோனியாகாந்தியை பார்த்து, பதி பக்தி இல்லாதவர்'' என்று அழைத்த குரூர புத்திக்கு சொந்தக்காரர் யார்?

இந்த வாசகங்களையெல்லாம் கருத்து சொன்ன காங்கிரஸ் நிர்வாகிகள் மறந்தாவிட்டார்கள்?

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு'' என்ற திருக்குறளை எந்த காங்கிரசாரும் மறந்திருக்க நியாயமில்லை. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் விவாதங்கள், வாதங்கள், போராட்டங்கள் இவற்றுக்கு இடையில் கூட- பிற கட்சி தலைவர்களை இது போன்ற வார்த்தைகளால் தாக்க கூடாதென்றும், அப்படி தவறுதலாக ஒருவேளை யாராவது தாக்கி பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் - அவர்களையே மன்னிப்பு கேட்க சொல்லியும் - அரசியலில் அன்று தொட்டு இன்றுவரை - அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நடந்து காட்டிய வழியிலேயே இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கின்ற கழகத்தின் தலைமை - மற்ற கட்சித்தலைவர்கள் ஒவ்வொருவரையும் -

மற்ற கட்சிகளின் தியாகிகள் அனைவரையும் எந்த அளவிற்கு மனதில் நிறுத்தி மக்களிடையே நினைவுச் சின்னங்களாக அமைத்து- இந்த இயக்கம் வளர்க்கப்பட்ட விதத்தையும், வளர்ந்து வருகின்ற விதத்தையும் விரிவான வரலாறாக ஆக்கியிருக்கிறது என்பதையும், இனியும் அந்த அரசியல் நாகரிகம் இந்த இயக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் ஏனோ, தினமணி மறந்து விட்டு- தேவையற்ற திசை திருப்பங்களை செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறது.

இந்த உண்மையை தினமணியாரே குறிப்பிட்டு இருக்கின்ற ஒரு சில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்; அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்ட கருத்து சொல்லியிருப்பார்களேயானால்- அல்லது அத்தகைய கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால்- சிந்தனை செய்து அதற்காக தினமணியார் போன்றவர்களை நிந்தனை செய்ய வேண்டாம்- வஞ்சகர்களை வந்தனை செய்து வாழ்விழந்த நாடு என்ற நிலைமை ஏற்படாமல் இருக்க இன்றைக்கே

ஆமாம், அமைகிறது அன்று போல் இன்றும் தி.மு.க. காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி.

அந்த கூட்டணி மேலும் பல வெற்றிகளை பெற உழைப்போம்! உழைப்போம்! உண்மைகளுக்கு மாறான செய்திகளை தவிர்ப்போம்! தவிர்ப்போம்! நம்மைப் பிரிக்க நினைப்போர் முயற்சிகளை தகர்ப்போம்! தகர்ப்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X