For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியப் பங்குச் சந்தை: தொடரும் சரிவு ஏன்?

By Sridhar L
Google Oneindia Tamil News

-ஷங்கர்

சென்னை: பங்குச் சந்தை தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கலங்கடிக்கும் விதத்தில் மோசமான சரிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக 8000 புள்ளிகளுக்கும் கீழே சென்று மீண்டுள்ளது சென்செக்ஸ்.

நேற்று முன்தினம் மட்டும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர் முதலீட்டாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.

மும்பை பங்குச் சந்தை, திங்களன்று 285 புள்ளிகளும், நேற்று முன்தினம் 180 புள்ளிகளும் மைனஸில் முடிவடைந்தது. இரண்டு நாட்களில் 465 புள்ளிகள் குறைந்தது பெரும் இழப்புதான். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இப்போதுதான். இந்ந நிலையில் இன்று பங்கு வர்த்தகம் ஆரம்பமே 130 புள்ளிகள் மைனஸில்தான் இருந்தது. இது முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சரி... ஏன் இந்த மோசமான நிலை?:

காரணம் அடுத்து வரும் நிச்சயமற்ற காலகட்டம்தான். காங்கிரஸ் கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா... தெரியாது.

இப்போது சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தேசிய உற்பத்தி அளவு மீண்டும் சாதக நிலையை அடைய வாய்ப்புகள் உண்டா... அதுவும் தெரியாது.

இந்திய பொருளாதாரத்தில் தொடங்கியுள்ள இந்த வீழ்ச்சியின் காலகட்டம் எத்தனை ஆண்டுகள் என்பதைக் கூட நம் பொருளாதார வல்லுநர்களால் கணிக்க முடியவில்லை. தெருமுனைக் கிளி ஜோசியம் மாதிரி ஆளாளுக்கு தெரிந்த கற்பனைகளைக் கூறி வருகின்றனர். மக்களும், தங்களுக்குத் தொடர்பில்லாத ஏதோ ஒரு சுவாரஸ்யமற்ற மெகா சீரியல் ஓடிக் கொண்டிருப்பதைப் போல கண்டுகொள்ளாமல் போய்க் கொண்டுள்ளனர்.

இப்படி எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்விட்டதால், இந்தியப் பங்குச் சந்தையில் கணிசமாக சம்பாதிக்கும் நோக்கில் பெரிய அளவு முதலீடு செய்திருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் முதலீடுகளை மீண்டும் ரொக்கமாக்கிக் கொள்ள விரும்புகின்றன. ஏற்கெனவே இந்தியப் பங்குச் சந்தையில் கணிசமாக இவை சம்பாத்தித்துவிட்டதால், அதை இழக்கக் கூடாது என்ற நோக்கில் பாதுதுகாப்பாக வெளியேறத் துடிக்கின்றன. அதனால் தங்கள் பிடியிலுள்ள பங்குகளை அப்படியே விற்றுவிட்டு, வந்தவரை லாபமென்று நடையைக் கட்டுகின்றன.

இவர்கள் இப்படி ஓடுவதைப் பார்த்து பயந்துபோய் எங்கே நாமும் நஷ்டப்பட்டுவிடுமோ எனப் பயந்து பங்குகளை விற்கின்றனர் உள்ளூர் முதலீட்டாளர்களும்.

பங்குச் சந்தை குறியீட்டெண் கீழிறங்கத் தொடங்குவது இப்படித்தான்.

சக்தியை இழந்த வட்டி விகித குறைப்பு:

இந்த சரிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசிடம் போதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை.

இரண்டு தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த நான்காது நிதிச் சலுகைகளால் கூட இந்த சரிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதிலிருந்தே, நமது பொருளாதாரமும் சந்தையும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்னொன்று எதற்கெடுத்தாலும் வட்டி விகிதத்தை ஏற்றுவதும் இறக்குவதும்தான் இந்திய நிதிக்கொள்கையா? இதற்கு எதற்கு நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி?

இன்னொன்று நிதித்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் நபர்களும் இதற்கான முழு அறிவோடு செயல்படுவதாகத் தெரியவில்லை. மனப்பாடம் செய்ததை திருப்பி ஒப்பிக்கும் மட்டமான மாணவனைப் போலவே, இவர்களுடைய நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

அடுத்த நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பார்த்து முழுசாகக் காப்பியடிக்கத் துவங்கியபோதே நமது பொருளாதாரம் வீழ்ச்சிக்குத் தயாராகிவிட்டது என்பதே உண்மை. சுய சார்பு என்று வாய்கிழியப் பேசிக் கொண்டே, நாம் ஒட்டுண்ணி பொருளாதாரத்தை வளர்த்தெடுத்துவிட்டோம். அதன் பலன்தான் இன்று பங்குச் சந்தை, வேலைவாய்ப்பு, உற்பத்தித் துறை, முரண்பாடான விலைவாசி மற்றும் பணவீக்கம் எனத் தொடர்கிறது.

இவ்வளவு மோசமான காலகட்டத்தில் நிதித் துறையின் பிற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, அடிப்படை பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதறஅகு பதில், வெறும் வட்டி விகிதங்களை கூட்டுவதுமான வேலையை மட்டுமே நம்புவது அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. இதனை நன்கு புரிந்து கொண்டதால்தான்தான் இனி இந்திய முதலீடுகள் பாதுகாப்பற்றவை என நினைக்கத் தொடங்கியுள்ளன அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்.

சரி, இதற்கெல்லாம் மாற்று உண்டா..?

ஏன் இல்லாமல்... சந்தைப் பொருளாதாரம், தனியார்மயமாக்கல் எனும் போர்வையில் நாட்டின் 70 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இதுவரை எந்த அளவு அழித்துள்ளனர் என்பது புரிந்தாலே நமது வீழ்ச்சிக்கான காரணங்கள் புரிந்துவிடும்.

அடிப்படை தொழில்களை அழித்துவிட்டு அல்லது புறக்கணித்து மேலைநாட்டுக் கவர்ச்சிப் பொருளாதாரத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டனர் நமது ஆட்சியாளர்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலாகிப் போனது போல, இந்த அடிப்படைத் தவறு நமது சுயத்தையும் அழித்துவிட்டது.

இந்த பொருளாதாரக் கோணல்கள் இன்னும் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன. ஒரு அதிர்ச்சிக்காக சொல்லப்படும் விஷயமல்ல இது. கிராமங்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பாதிப்புதான் இன்னும் இன்னும் பல மடங்கு பெருகி பொருளாதாரத்தின் கழுத்தை இறுக்கப் போகிறது.

ஆக அடிப்படையைச் சரி செய்ய வேண்டிய அவசர அவசியம் இப்போது நமக்கு வந்திருக்கிறது. பேட்ச் அப் வேலைகளை விட்டுவிட்டு, முழுமையான சீரமைப்பில் அரசு இறங்க வேண்டும். அடுத்து வரும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்கள் முன் உள்ள மிகப்பெரிய பணி இதுவே!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X