For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியனாக இருக்க வைகோ தகுதியற்றவர்-தங்கபாலு

By Sridhar L
Google Oneindia Tamil News

Thangabalu
சென்னை: வைகோ முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதியற்றவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்.

சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. சபை மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது. நிவாரண உதவிகளாக புதிய வேட்டி, சேலை, பால் பெளடர், அரிசி, பருப்பு ஆகியவை திரட்டப்பட்டும் என்றார்.

பின்னர் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்: இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதை நாடு அறியும். இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு அவருடைய முந்தைய அறிக்கைகளே பதிலாக அமையும்.

கேள்வி: தேர்தலையொட்டி இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் உதவுகிறதா?

பதில்: பல கட்சிகள் தோன்றாத காலத்திலேயே இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிகள் எடுத்து வந்துள்ளது. காங்கிரசும், திமுகவும் இலங்கை பிரச்சினையில் மிகச் சிறப்பாக நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஜெயலலிதா நேற்று வரை எடுத்த நிலைப்பாட்டுக்கும் இப்போதைய நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் எல்லா கட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மத்திய அரசையோ சோனியாவையோ குறை கூறுவதை ஏற்க முடியாது. குறை கூறுவதால் இலங்கை பிரச்சினை தீர்ந்து விடாது.

கேள்வி: இந்திய அரசுதான் போரை நடத்துவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்: இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியாது. அது அந்த நாட்டின் உள் விவகாரம் என்று ஜெயலலிதா ஏற்கனவே அறிக்கை விடுத்தார். இப்போது அவர் பேசுவது, முரண்பாடாக உள்ளது. இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யவில்லை. தா.பாண்டியன், வரதராஜன், வைகோ ஆகியோருக்கு எனது கேள்வி இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும், இஸ்ரேலும் ஆயுதம் வழங்குவதை பலமுறை நான் சுட்டிக் காட்டியும் கண்டிக்காதது ஏன்?

கேள்வி: இலங்கையில் இந்திய வீரர்கள் முகாமிட்டு போரில் ஈடுபடுவதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்: அவர் சொல்வது அப்பட்டமான பொய். வைகோ, முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். ராஜீவ் கொலைக்கு பிறகும் 6 மாதங்கள் விடுதலைப் புலிகளுக்கு உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதி அற்றவர்.

கேள்வி: விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணியில் சேருவது பற்றி நல்ல செய்தி வரும் என்று வாசன் கூறி இருக்கிறாரே?

பதில்: நல்ல செய்தி வந்தால் நல்லதுதானே?

கேள்வி: விஜயகாந்த் முடிவுக்காக காங்கிரஸ் காத்திருக்கிறதா?

பதில்: கூட்டணி பற்றி இன்னும் பேசவில்லை. புதியவர்கள் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேள்வி: இது விஜயகாந்த்துக்கு பொருந்துமா?

பதில்: எல்லோருக்கும் பொருந்தும். புதியவர்கள் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான எல்லா முயற்சிகளும் சோனியா காந்தியின் வழி காட்டுதலின்படி நடந்து வருகிறது. விஜயகாந்த் என் நண்பர். அவர் ஒரு தேசியவாதி.

கேள்வி: உங்கள் கூட்டணியில் பாமக நீடிக்கிறதா?

பதில்: அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் நீடிக்கிறார்கள்.

கேள்வி: விடுதலை சிறுத்தைகள் உங்கள் கூட்டணியில் இடம் பெறுவார்களா?

பதில்: இந்த பிரச்சினை பற்றி பேசி குழப்ப வேண்டாம் என்றார்.

வாசனிடம் தொழிலாளர் நலத்துறை:

இதற்கிடையே மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் வாசன், தொழிலாளர் நல அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் வேலைகளை கவனிக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அவர் வசம் இருந்து தொழிலாளர் நலத்துறை வாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிலாளர் நல அமைச்சக கட்டிடத்துக்கு வந்து வாசன் பொறுப்பேற்று கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X