For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் - ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramsoss
சென்னை: போரை நிறுத்தாமல், மக்களை மீட்கிறோம் என்று அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:-

இலங்கை போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.

இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்சே அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வன்னிப் பகுதியில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரை நூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும்.

தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்ரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.

பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இனப்படுகொலை நடத்தும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிகப்பெரிய மோசமான தவறாகும்.

ராஜபக்சே அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை.

தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும்.

இந்திராகாந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

போர்ப்பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.

அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆய்த மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்கப் போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.

இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர்ப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X