For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த்தின் சூட்சுமப் பேச்சு - அர்த்தம் என்ன?

By Sridhar L
Google Oneindia Tamil News

Vijayakanth
காஞ்சிபுரம்: நான் யாருடன் சேரப் போகிறேன் என்பது குறித்து பொதுமக்களும், பத்திரிக்கைக்காரரர்களும் குழப்பத்தில் உள்ளனர். நீங்கள் குழப்பத்திலேயே இருங்கள், நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ள விஜயகாந்த், லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் மறைமுகக் கூட்டணியை அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

இந்தத்தடவை தே.மு.தி.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள். அப்படியில்லையென்றால் நான் யாரை கையை காட்டுகின்றேனோ அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதுதான் விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் வைத்த பொடி.

தனித்துப் போட்டியிடுவேன் என்று தொடர்ந்து கூறி வருபவர் விஜயகாந்த். தைரியம் இருந்தால் அனைத்துக் கட்சிகளும் தனித்தே போட்டியிடட்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.

ஆனால் லோக்சபா தேர்தல் தொடர்பாக அவரது நிலை இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. நேற்று அவர் காஞ்சிபுரத்தில் பிரசாரத்தில் பேசியபோது கூட எல்லோரும் குழப்பத்திலேயே இருங்கள், நான் மட்டும் தெளிவாக இருக்கிறேன் என்று குழப்பமாகவே பேசியுள்ளார்.

தேங்காய் உடைப்பது போல இதுவரை பேசி வந்தவர் விஜயகாந்த். ஆனால் இந்த முறை கூட்டணியே கிடையாது, தனித்துதான் போட்டி என்று பட்டவர்த்தனமாக இதுவரை சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என்கிறார் விஜயகாந்த். ஆனால், நான் யாரைக் காட்டுகிறேனோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் சூட்சுமமாக பேசியிருப்பதுதான் புரியவில்லை. மறைமுகமாக காங்கிரஸ் கட்சியுடன் அவர் கூட்டணி வைக்கப் போகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பிள்ளையார்பாளையத்தில் உள்ள கன்னி கோவிலில் நேற்று விஜயகாந்த் பேசியது இதுதான்..

காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களுக்குப் பெயர் பெற்றது காஞ்சிபுரம். அதோடு அறிஞர் அண்ணா பிறந்த ஊர். அதனால்தான் இங்கு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளேன்.

திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்தீர்கள். எம்.பி. தேர்தல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாகும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர்.

இலங்கை, மலேசியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் இந்திய அரசு குரல் தருவதில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளைத் தீர்க்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவும் மத்திய அரசில்தான் நீண்ட காலமாக அங்கம் வகித்து வருகிறது. ஆனால், மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை.

நடப்பது தேமுதிக ஆட்சி...

2 ஏக்கர் நிலம், இலவச கலர் டிவி என கவர்ச்சித் திட்டங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை அப்படியே பின்பற்றி வருகின்றனர். நடப்பது தேமுதிக ஆட்சி போல் உள்ளது.

தேர்தலுக்குப் பணம் அளிக்க வந்தால், அவர்களிடமே அவர்கள் தரும் பணத்தைத் தூக்கி எறியுங்கள். பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தேர்தலை புறக்கணிக்கலாம் என முதலில் அறிவித்தேன். ஆனால், மற்ற கட்சிகள் பதவி, அதிகாரத்தைத்தான் எதிர்பார்த்துள்ளன.

கச்சத் தீவில் அந்தோணியார் மாதா கோயிலை வழிபடவும், மீன் வலைகளை காயவைக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதைக்கூட இந்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை. கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டனர். தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறுகின்றனர். ஆனால், வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் தான் முதலிடத்தில் உள்ளது.

நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ளன...

தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் மெÜனமாக உள்ளார் என அனைவரும் கூறி வருகின்றனர். நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவது போல் மக்களுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன்.

(பேச்சின் இடையே கூடியிருந்த தொண்டர்களிடம் "திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா' எனக் கேட்டார். அப்போது பொதுமக்கள் "வேண்டாம், வேண்டாம்' என கூச்சலிட்டனர்.)

நான் அடையாளம் காட்டுபவருக்கு வாக்களியுங்கள். இதில் நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

23 முதல் 25-ம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. அதன்பின் 26-ம் தேதி முதல் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.

தமிழர்களும், தமிழகமும் சிறப்பான இடத்தைப் பெற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் பேச்சு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் பட்டென்று உடைத்து அவர் பேசாமல் மழுப்பியிருப்பது அவர் தனித்தே போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள வாக்காளர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்திருக்கும் என்பதும் உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X