For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்கை பிரிக்கும் தேமுதிக-திகிலில் திமுக, அதிமுக

By Sridhar L
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: சட்டசபைத் தேர்தலி்ல் 100 தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 10 தொகுதிகளில் இக்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

தேமுதிகவின் நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தனித்துப் போட்டி என்றால் அது அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என்கிறார்கள்.

ஆண்டவனுடனும், மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று கூறியுள்ளார் விஜயகாந்த். அதேசமயம், நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் பூடகமாக பேசியுள்ளார். இதற்கு, காங்கிரஸுக்கு அவர் மறைமுகமாக ஆதரவளிக்கப் போவதாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

இந் நிலையில், தேமுதிக தமிழகத்தில் 10 தொகுதிகளில் திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தல் கணக்கை வைத்துப் பார்த்தால் இது புலனாகும். கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல், தேமுதிக சந்தித்த முதல் தேர்தலாகும்.

இதில், விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால் அது பிற தொகுதிகளில் ஏற்படுத்திய விளைவு, மிகவும் அபாயகரமானது.

மொத்தம் 8.33 சதவீத வாக்குகளைப் பெற்றது தேமுதிக. போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் குறைந்தது 10,000 முதல் 20,000 வாக்குகளைப் பெற்றனர் தேமுதிக வேட்பாளர்கள்.

இதனால் திமுகவுக்கு 35 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 65 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. மொத்தம் 100 தொகுதிகளில் தேமுதிக இந்த இரு கட்சிகளின் வாழ்க்கையில் விளையாடியது.

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவை விட்டு விட்டு திமுகவைத் தான் கடுமையாகத் தாக்கினார் விஜய்காந்த். இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகள் வழக்கம்போல அப்படியே அதிமுகவுக்கு ஒட்டுமொத்தமாக செல்லாமல் அதில் ஒரு பகுதி தேமுதிகவுக்குப் போய்விட்டன. இதுவும் அதிமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மேலும் திமுகவின் வாக்கு வங்கியில் படித்தவர்கள் அதிகம். அவர்கள் கட்சியில் நடக்கும் அராஜகங்கள், அழகிரியின் அடாவடி, முதல்வரின் குடும்பத்தினருக்கே தரப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை விரும்பாவிட்டாலும் வாக்கை மாற்றிப் போட அவ்வளவு சீக்கிரத்தில் முன் வருவதில்லை. ராஜிவ் கொலைக்குப் பின் திமுகுக்கு எதிராக பெரும் அலை வீசிய நிலையில், வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வென்றபோதும் கூட அதன் ஓட்டு வங்கி 24 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவர்கள் ஊரக மக்கள். இதில் பெரும்பாலானவர்கள் சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள். இந்த சினிமா கவர்ச்சியே இதுவரை அதிமுகவை அசைக்க முடியாத சக்தியாக வைத்திருந்தது.

ஆனால், அதிமுகவுக்கு ஆபத்தும் அதே சினிமா கவர்ச்சியால் விஜய்காந்துக்கு ரூபத்தில் வந்துவிட்டது. விஜய்காந்த் பக்கமாய் சரிந்த வாக்குகளில் அதிமுக வாக்குகளே அதிகம் என்பதை கடந்த சட்டமன்றத் தேர்தலே நிரூபித்தது.

இதுவரை எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற நடிகர், நடிகை-கம் அரசியல்வாதிகளின் பின்னால் போனவர்கள் விஜய்காந்த் வந்ததும் அங்கே போக ஆரம்பி்த்துவிட்டது அதிமுகவுக்கு பெரும் அடியே.

இந் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தனித்து நின்றால் திமுக, அதிமுகவுக்கு குறைந்தது 10 தொகுதிகளில் தலைவலி ஏற்படும் என கருதப்படுகிறது.

இதிலும் அதிமுகவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விவரம அறிந்தவர்கள்.

முன்பு பாமக, மதிமுக உருவானபோது இதே நிலைதான் ஏற்பட்டது. இந்த இரு கட்சிகளும் ஆரம்பத்தில் தனித்துத்தான் போட்டியிட்டு வந்தன. இதனால் திமுக, அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தங்களுக்கென்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிய இந்த இரு கட்சிகளாலும் திமுக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்தே இந்த இரு கட்சிகளும், மதிமுக, பாமகவை மாறி மாறி அணியில் சேர்த்து வருகின்றன.

இப்போது அந்த காலம் மீண்டும் தேமுதிக ரூபத்தில் திரும்பி வந்துள்ளது. தேமுதிகவின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் உறுதியாகி வருவதால், பாதிப்புகளும் இனி கடுமையாக இருக்கும் என்பதால்தான், விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க கடந்த காலத்தில் பேசியது, கக்கியது, காரித் துப்பியது உள்ளிட்டவற்றை மறந்து விட்டு திமுகவும், அதிமுகவும் படாதபாடுபட்டு வருகின்றன.

ஆனால் தனது பலத்தை விஜயகாந்த் தெளிவாக உணர்ந்திருப்பதால், படு தெளிவாக நழுவ முயற்சித்து வருகிறார்.

அதேசமயம், காங்கிரஸ் உறவு எதிர்காலத்தில் கண்டிப்பாக தனக்குத் தேவை என்பதை அவர் உணர்ந்துள்ளார். இதனால்தான் காங்கிரஸிடம் மட்டும் தொடர்ந்து நட்பு பேணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இப்போதைக்கு தனித்துப் போட்டி என்று தேமுதிக கூறினாலும் கூட எதிர்காலத்தில் அதுவும் ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்பது மட்டும் நிஜம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X